பிரபல நடிகர் விஜயகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது தனது தந்தையின் உடல் நலம் குறித்து நடிகர் அருண் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய நடிப்பு பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் இவர் நடித்து வந்தாலும் இவரால் ஒரு முன்னணி நடிகராக திகழ முடியவில்லை. இந்த நிலையில் அஜித்துடன் இவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது.
சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், அருண் விஜய்யின் மகன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து நடித்திருந்த படம் ஓ மை டாக் . இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று செய்திகள் பரவியது.
இந்த நிலையில் அவரது மகனும் நடிகருமான அருண் விஜய் தனது தந்தையின் உடல்நிலை குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ”என்னுடய நண்பர்கள், ரசிகர்களுக்கு, அப்பா வீட்டில் நலமாக இருக்கிறார். தயவுசெய்து வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி” என்று கூறி விஜயகுமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.