இந்திய வேகப்பந்துவீச்சு குறித்து அஸ்வின் கவலை
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை கட்டமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய வேகப்பந்துவீச்சு வரிசையில் அனுபவம் குறைவாக இருப்பதால், புவனேஷ்வரின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"புவனேஷ்வரை ஏன் பரிசீலிக்கக் கூடாது?"
இதுகுறித்து பேசிய அஸ்வின், "தற்போது இந்திய வேகப்பந்துவீச்சில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது புவனேஷ்வர் குமாரை ஏன் மீண்டும் பரிசீலிக்கக் கூடாது? அவரை உடனடியாக அணியில் சேர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது கொடுத்து பார்க்கலாம். அதன் பிறகு முடிவு எடுக்கலாம்," என்றார்.
"ஆர்சிபி வெற்றியில் முக்கிய காரணம்"
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் புவனேஷ்வர் தனது உடற்தகுதியை சிறப்பாக பராமரித்து வந்ததுடன், ஆர்சிபி அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்ததாக அஸ்வின் பாராட்டினார். "முகமது ஷமிக்கும், புவனேஷ்வருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், புவி கடந்த இரண்டு சீசன்களாக முழுமையான உடற்தகுதியுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்ல அவர் முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தார். புதிய பந்தில் ஸ்விங் செய்ய முடியும், இறுதி ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீச முடியும். அதுமட்டுமல்ல, தேவையான நேரத்தில் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது," என்று கூறினார்.

"அனுபவமும் இளமையும் சேர வேண்டும்"
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அனுபவம் மிக முக்கியம் என்றும், இளம் பந்துவீச்சாளர்களுடன் புவனேஷ்வர் போன்ற ஒருவர் இருந்தால் அணியின் சமநிலை அதிகரிக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்தார். "குர்னூர், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ் ஆகியோருடன் மட்டும் உலகக் கோப்பைக்கு செல்ல முடியுமா என்றால் எனக்கு சந்தேகம்தான். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் இருக்கலாம். அதோடு பும்ரா, ஹர்ஷித் ராணா போன்றவர்கள் இருப்பார்கள். ஆனால் புவனேஷ்வர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருந்தால் இளமையும் அனுபவமும் சரியான கலவையாக அமையும்," என்றார்.
"இனி வீரர்களை உருவாக்கும் நேரம் இல்லை"
உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால், இனி புதிய வீரர்களை சோதித்து பார்க்கும் கட்டத்தை தாண்டி விட்டதாகவும், இறுதி அணியை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அஸ்வின் வலியுறுத்தினார். "இப்போது புதிய வீரர்களை உருவாக்கும் நேரம் இல்லை. ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். குர்னூர், பிரசித் ஆகியோரும் வாய்ப்பு பெற்றுவிட்டனர். இப்போது மீண்டும் அவர்களை மாற்றி புதிய பந்துவீச்சாளர்களை கொண்டு வர முடியாது.

உலகக் கோப்பைக்காக நம்பிக்கை வைக்க வேண்டிய நான்கு அல்லது ஐந்து வேகப்பந்துவீச்சாளர்களை இப்போதே அடையாளம் காண வேண்டும். அதனால்தான் புவனேஷ்வர் குமாரின் பெயரும் அந்த விவாதத்தில் இருக்க வேண்டும்," என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். அனுபவமும் திறமையும் ஒருசேர கொண்ட புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்குள் வர வேண்டுமா என்பது குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.






