‘BAD GIRL’ திரைப்படம் விருது வென்றிருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Bad Girl’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Teejay’ அருணாச்சலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டீசர் வெளியீடு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப், இயக்குனர் வர்ஷா பரத், நடிகர்கள், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ். தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒரு பெண்ணின் வாழ்க்கையிலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை விருந்தினர்கள் அனைவரும் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கலாச்சார சீரழிவு:
இந்தப் படம் இளம் பெண்ணின் காதல், தனிப்பட்ட விருப்பங்களில் அவர்களின் சுதந்திரமான முடிவு எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இதுவரை திரைக்கு வராத கதைகளை இயக்க வேண்டும் என்ற பெயரில், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக, இந்த டீசரை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு இருந்தார்கள். அதேபோல் பிராமண சமூகத்தை முன்னிறுத்தி ஏன் இந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறார்கள்.
இயக்குனர் வர்ஷா பரத் பேச்சு:
அதேபோல் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வர்ஷா பரத், தமிழ் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களில், எப்பவுமே எப்படி கதை எழுதுகிறார்கள் என்றால் பெண் என்றால் ஒரு பூ, ஒரு பத்தினி, ஒரு தெய்வம், தாய், தூய்மை அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. இது எல்லாம் ஒரு பெண் தோளில் சுமப்பதற்கு அழுத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க நினைச்சேன். அந்தக் கதாபாத்திரத்தை கேட்டு கதாநாயகி ராதா எப்படி ரியாக்ட் பண்ணாங்களோ, அதே மாதிரி தான் எல்லா பெண்களும் ரியாக்ட் பண்ணுவாங்க. ஆனா, பசங்க கிட்ட இருந்து ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஷன் தான் வந்தது என்று பேசி இருந்தார்.
‘NETPAC’ விருது:
இவரின் பேச்சு, தமிழகத்தின் கலாச்சார முறையைசீரழிக்கும் விதத்தில் உள்ளதாக பலர் தங்களின் கட்டணத்தை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ‘NETPAC’ என்கிற உயரிய விருதை இப்படம் வென்றிருக்கிறது. இந்த ‘NETPAC’ விருது ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து தேர்வாகும் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. இயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது படைப்புகளை மட்டுமே பரிசீலித்து இந்த விருது வழங்கப்படும்.
ரோட்டர்டேம் திரைப்பட விழா :
அப்படி இயக்குனர் வர்ஷா பரத்தின் முதல் திரைப்படம் ஆன இந்த ‘பேட் கேர்ள்’ படத்திற்கு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டு இருக்கிறது . அதேபோல் இந்த ‘NETPAC’ விருதை ‘விதேயா’ படத்திற்காக இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் வென்று இருக்கிறார். மேலும், இந்த ஆண்டிற்கான ரோட்டர்டேம் திரைப்பட விழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா பிப்ரவரி 8 ஆம் தேதி இன்று வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டில் இயக்குனர் ராமின் ‘பறந்துப் போ’, இயக்குனர் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ போன்ற திரைப்படங்களும் இந்த விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிடப்பட்டிருக்கிறது.