தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ். 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.
அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்படி அந்த ரோலுக்கு செட் ஆனார் என்பதை சமீபத்தில் ஆரவ்வுடன் லைவ் சாட்டில் பேசி இருந்த கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், முதலில் அந்தக் கேரக்டருக்கு அவரை நடிக்க வைக்கும் எண்ணமே இல்லை. வேறொருவரைத் தான் முடிவு பண்ணினோம். காமெடிக் காட்சியை எழுதி முடித்தவுடன், பார்க்கவரும் பெண்ணின் தற்போதைய அப்பா ஒருவர் வேண்டும் என்று அந்தச் சமயத்தில் தோன்றியது. இங்கிருந்து கூட்டிக் கொண்டு போன கம்பெனி நடிகர்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருப்பவர்கள் யாருமே செட் ஆகவில்லை.
கொஞ்சம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்றேன். படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிந்து கொண்டு இருந்தவர் தான் அந்த நபர். அவரை நடிக்க சொன்ன போது அவர் மிகவும் பயந்து போய் எனக்கு வசனம் வராது சார் என்று சொன்னார். நான் சும்மா ஒக்காருயா என்றேன். பின்னர் மிக்சர் வாங்கி வர சொல்லி, மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது’ என்றேன் என்று கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.