திரையுலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திரையுலகில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் அருண் விஜய்-க்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.
அருண் விஜய். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து “பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி,துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன், முத்தம், இயற்கை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்த பிரியம் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, நீங்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த அருண்விஜய், தன்னம்பிக்கையை விடாமல் நன்றாக உழையுங்கள் என்று கூறியுள்ளார். என்னதான் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும், நடிகர் அருண் விஜய் ஒரு ஹிட் படத்திற்காக பல ஆண்டுகளாக போராடி வந்தார். இடையில் இவர் நடித்த மல மல, மாஞ்சா வேலு போன்ற படங்கள் கமர்சியல் ஹிட் அடைந்தது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்னவோ ‘தடையற தாக்க திரைப்படம் தான். அந்த படத்திற்கு பின்னர் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், இந்த படம் அருண் விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது நடிகர் அருண் விஜய், பாக்ஸர், சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.