பிக் பாஸ் 8 போட்டியாளராக நுழைந்திருக்கும் நடிகர் ரஞ்சித் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித் . குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்த ரஞ்சித் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய 'பொன் விலங்கு' படத்தில் முதன் முதலில் நடித்தார். இதைத் தொடர்ந்து இவர் சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் 'மறுமலர்ச்சி ' என்னும் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த வில்லனுக்கான 'தமிழக அரசின் விருதையும் பெற்றார்' என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஞ்சித் குறித்து:
மேலும், நடிகர் ரஞ்சித் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதலில் 'பீஷ்மர்' என்ற படத்தை இயக்கி தயாரித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. அதை அடுத்து நடிகர் ரஞ்சித் நீண்ட ஆண்டுகளாக படங்களை எடுக்காமல் இருந்தார். சமீபத்தில் தான் இவர் நாடகக் காதலை எதிர்க்கும் வகையில் 'கவுண்டம்பாளையம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தால் பல சர்ச்சைகள் எழுந்தது நாம் அறிந்ததே.

முதல் திருமணம்:
இதற்கிடையே, நடிகர் ரஞ்சித் 'நேசம் புதுசு' என்ற படத்தில் நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 1999 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா மற்றும் ஆகாஷ் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இரண்டாவது திருமணம்:
அதனைத் தொடர்ந்து தனது முதல் மனைவி பிரியா ராமனை விவாகரத்து செய்த அதே ஆண்டு இவர் சீரியல் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மன வாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தனிமையில் பல ஆண்டுகள் இருந்த ரஞ்சித் மீண்டும் தனது முதல் மனைவியான நடிகை பிரியா ராமனுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து வாழ தொடங்கினார். தங்களின் விவாகரத்தை ரத்து செய்வதாக கூறி, அவர்களின் திருமண நாளிலேயே போட்டோவை இருவரும் வெளியிட்டு இருந்தார்கள்.

பிக் பாஸில் ரஞ்சித்:
தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மேலும், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் அவரது மனைவி தான் என்று ரஞ்சித் கூறியிருந்தார். இவர் சிறப்பாக விளையாடி வந்தாலும், இவர் உண்மையாக இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் போலியாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்கள் கூறி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் ரஞ்சித் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.






