நந்தன் படம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு இயக்குனர் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் நந்தன். இந்த படத்தை இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். காலம் காலமாக நம்முடைய நாட்டில் நடக்கும் உயர்-தாழ்த்தப்பட்ட சாதிகளை மையமாக வைத்து தான் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இந்த படம் ஓடிட்டியில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களுமே பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள்.
தலைவர் அண்ணாமலை பதிவு:
அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நந்தன் படத்தை பாராட்டி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காக பட்டியலின மக்களை சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல்வாதிகளை தோலுரித்து இந்த படம் காட்டி இருக்கிறது. தன்னுடைய நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் கஷ்டங்களை நம்முடைய கண்முன் நடிகர் சசிகுமார் காண்பித்திருப்பது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நந்தன் படம் குறித்து சொன்னது:
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த நந்தன் படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த இயக்குனர் சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்து பதில் போட்டு இருக்கிறார்.
அதில் அவர், உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்.
இயக்குனர் பதில்:
நந்தன் படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து பட்டின பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையை காண்பிக்கிறது. ஒடுக்கு முறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாகிறது. நந்தன் படத்தை பெரிய அளவில் பேசும் பொருள் ஆக்கியிருக்கிறது. பயணம், அரசியல், படிப்பு ஆகிய பணிகளுக்கு மத்தியில் நந்தன் படம் பார்த்து கருத்து சொன்னதிற்கும் சமூக நீதிக்கான குரலை பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார் என்று கூறியிருக்கிறார்.
நந்தன் பட கதை:
படத்தில் பாலாஜி சக்திவேல் என்பவர் ஆதிக்க வர்க்க குடும்பத்தில் இருந்து அதிகாரம் செய்கிறார். இவர் பல வருடமாக ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாலாஜி சக்திவேல் இருக்கும் தொகுதியில் திடீரென்று தாழ்த்தப்பட்டவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். இதனால் தனக்கு விசுவாசியாகவும், தான் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்கும் ஒரு ஆளை தலைவராக்கி தன்னுடைய அடிமையாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு சசிகுமாரை தேர்ந்தெடுக்கிறார். தலைவராகிய பிறகு சசிகுமார் என்ன செய்தார்? பாலாஜி சக்திவேலின் எண்ணத்தை முறியடித்தாரா? அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தையும் என்ன செய்தார்? தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமையை மீட்டெடுத்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.