அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பாஜக எம்.பி குரல் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் அல்லு அர்ஜுன் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்குக்கு வந்த அல்லு அர்ஜுனை பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள். இந்த கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்த நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் கோமாவில் இருக்கிறார்.

இதை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். பின் கடந்த வாரம் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்து இருந்தது. பின் அவர் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்ற செயல்.
அல்லு அர்ஜுன் சர்ச்சை:
சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலே காவல்துறையினர் அவருக்கு அனுமதி தர மறுத்திருந்தார்கள். இருந்துமே அவர் படம் பார்க்க வந்திருந்தார். அதுவும் கார் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வந்திருந்தார். இந்த கூட்டத்தில் தான் ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்தார். இது வருத்தத்துக்குரிய ஒன்று. நடிகர்கள், பிரபலங்கள் பலருமே அல்லு அர்ஜுனுக்கு தான் ஆதரவு தெரிவித்தார்கள். யாருமே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. விபத்தில் கை,கால் போன மாதிரி அல்லு அர்ஜுனை நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. இதுதான் உங்களுடைய மனிதமா? என்று விமர்சித்து பேசி இருந்தார்.

அல்லு அர்ஜுன் பேட்டி:
பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுன், ஹைதராபாத் திரையரங்கில் நடந்தது எதிர்பாராத சம்பவம். இதில் யாருடைய தவறுமே இல்லை. பொறுப்பில்லாமல் நான் கூட்ட நெரிசலில் ரோடு சோவில் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க போனேன். ஆனால், அங்கு சென்றால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும், சரியான நேரம் வரும்போது போகலாம் என்று வழக்கறிஞர்கள் சொன்னதால் தான் அமைதியாகிவிட்டேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்னுடைய அப்பாவை அனுப்பி இருந்தேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவியின் இழப்பு, குழந்தையின் இழப்பு எவ்வளவு கஷ்டம் வலி என்பது எனக்கும் தெரியும். மனித நேயம் அற்றவன், கெட்டவன், மோசமானவன் என்று என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். இது ரொம்பவே எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்:
இதை அடுத்து கடந்த 22 ஆம் தேதி உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை எரிந்தும், பூந்தொட்டிகளை உடைத்தும் கலவரம் செய்து இருந்தார்கள். இதனால் கலவரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன் தனியறையில் போலீஸ் அல்லு அர்ஜுன் இடம் மீண்டும் விசாரணை நடத்தி இருந்தது. சுமார் மூன்று மணி 40 நிமிடங்கள் வரை விசாரணை நடைபெற்று இருந்தது. அந்த விசாரணையில் போலீசாரின் கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் பதில் அளித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பிஜேபி எம்பி அனுராக் தாக்குர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிஜேபி எம்பி பேட்டி:
அதில் அவர் ,தெலுங்கு நடிகர்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். திரையுலகில் தெலுங்கு நடிகர்களுடைய பங்களிப்பை நீங்கள் பார்த்தால், இந்திய சினிமாவையும் உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிலர் அவர்களை தரைக்கு கீழே இழுக்க முயற்சிக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக பிரதமர் மோடியின் ஆட்சியில் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்தது. இவர்களுடைய பங்களிப்பை நாடும் உலகமும் பாராட்டியிருந்தது. இன்னொரு பக்கம் ஆர் ஆர் ஆர், புஷ்பா, கேஜிஎப், பாகுபலி போன்றவை இந்திய சினிமாவுக்கு புகழைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். சர்ச்சையை உருவாக்குவதற்கு பதிலாக அதை சரி செய்வதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.






