நீட் தேர்வு பயத்தால் ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி அனிதா துவங்கி பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில திங்களுக்கு முன்னர் கூட அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) கடந்த ஆண்டு தேர்வு எழுதியபோதும் தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு அதிக சிரத்தையுடன் படித்துள்ளார். இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டார். மேலும், தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதம் மூலம் எழுதி வைத்துள்ளார் ஜோதி.
அந்த கடிதத்தில் நீங்கள் அனைவரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள், ஆனால் ஒருவேளை மருத்துபடிப்புக்கு சேரமுடியாமல் போனால், உங்களுடைய கடின உழைப்பு அனைத்தும் வீணாக போகும், எனக்கு மிகவும் பயமாக உள்ளது, என்னை மன்னித்துவிடுங்கள், நான் சோர்ந்துவிட்டேன் ( I am Sorry, I am Tired )” என்று குறிப்பிட்டு இருந்தார்.இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அவரது அறையில் இருந்து கடிதத்தையும், அவர் பேசிய ஆடியோ உரையாடலையும் கைப்பற்றினர்.
மாணவி ஜோதியின் இந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் மாணவி ஜோதியின் இந்த கடிதத்தை பற்றி விமர்சித்து உள்ள பா ஜ கவின் தீவிர ஆதரவாளர் கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சரளமாக ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுத வராது என்றாலும் படிக்குற எல்லோரும் டாக்டர் ஆயிடனும் , அப்பறம் யார் தான் பேஷண்ட் ???? எல்லாரும் பல்லக்குல ஏறிட்டா பல்லக்கை யார் தான் தூக்குறதாம் ??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கிஷோர் கே சாமியின் இந்த பதிவை பார்த்து கடுப்பான பலர், கிஷோர் கே சாமியை கடுமையாக விமரித்து வருகின்றனர்.