சிம்பொனி சர்ச்சை தொடர்பாக இளையராஜாவை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையதத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை துவங்கி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இளையராஜா சிம்பொனி குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இளையராஜா லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இளையராஜா, தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன்.
சிம்பொனி இசை:
இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். இன்கிரிடபில் இந்தியா போல் நான் இன்கிரெடிபில் இளையராஜா என்று கூறி இருந்தார். இதை அடுத்து லண்டனில் சிறப்பாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு இளையராஜா சென்னைக்கு திரும்பி இருந்தார். இதற்கிடையில் இளம் இசை அமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் என்பவர் தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவினார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இளையராஜாவை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன் தான். அவன் இசையை என்னிடம் தான் கற்று வருகிறேன்.

இளையராஜா பேட்டி:
ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசை அமைகிறேன் என்று என்னிடம் வந்து ஒரு இசை அமைத்துக் காட்டினான். அதைக் கேட்ட நான் சில நிமிடத்திலேயே நிறுத்த சொல்லிவிட்டேன். இது சிம்பொனி மாதிரி இல்லை. சினிமா பிஜிஎம் மாதிரி இருக்கிறது. சிம்பொனி இசை என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு இசையமை என்று அவனுக்கு அறிவுரை சொன்னேன். மற்றபடி சிம்பொனி இசையை யாரையும் வைத்து நான் எழுதவில்லை. இத்தனை வருடங்களாக நான் இசைத்துறையில் சொந்த காலில் நடப்பவன். யாருடைய உதவியையும் நான் பயன்படுத்தியது கிடையாது என்று கூறியிருந்தார்.

லிடியன் நாதஸ்வரம் பேட்டி:
மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் லிடியன் நாதஸ்வரம், இளையராஜா அங்கிள் என்னுடைய குரு. அவர் சொன்னது எல்லாமே உண்மை தான். சிம்பொனி பற்றி அவரிடம் நான் நிறைய பேசி இருக்கிறேன்.
அப்போது அவர், நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றி நிறைய விருதுகளை பெற்று பெருமை சேர் என்று சொன்னார். அவர் எப்போதுமே ஆனஸ்ட் ஆனவர். மனதில் எதையும் வைத்துக்கொண்டு பேசமாட்டார். வெளியில் அப்படி தெரிந்தாலுமே அவர் உண்மையில் அப்படி கிடையாது என்று கூறியிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இந்த நிலையில் இளையராவை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தனது 14 வயதிலேயே World's Best Talent போட்டியில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம். 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார். தற்போது திருக்குறளின் 1,330 குறள்களுக்கும் பிண்ணனி இசையமைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறார் லிடியன்.
இந்த இசைத்தொகுப்பு வெளியானால் தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும். பியானோ, ட்ரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியவர். இவருக்கு தற்போது வயது 20 மட்டுமே. 80 வயதை தாண்டிய இளையராஜாவிடம் சிம்பொனி இசை குறித்த விளக்கங்களை சமீபத்தில் கேட்டுள்ளார். அதில் தான் செய்த இசை முயற்சியையும் அவருக்கு காட்டியுள்ளார். தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால்.. லிடியனுக்கு இவரே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பாடல் போல உள்ளது. சிம்பொனியை முழுமையாக கற்றுக்கொண்டு வா என கூறியுள்ளார்.
* னது 14 வயதிலேயே World's Best Talent போட்டியில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 11, 2025
* 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார்.
* தற்போது திருக்குறளின் 1,330 குறள்களுக்கும்… pic.twitter.com/W61MqHxxF2
அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது.. பெரிய மனிதனுக்கு அழகா? திரை இசையில் தன்னை மீறி எவனுமில்லை என்று ஆடியபோது.. ரஹ்மான் வந்து இவரது கொட்டத்தை அடக்கினார். அப்போது ஆரம்பித்த சரிவு.. 33 ஆண்டுகள் ஆகியும் மீளவில்லை. தற்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன்.. அதுவும் 20 வயது சிறுவன் வந்துவிடக்கூடாது எனும் எரிச்சல் தான் இவரை இப்படி பேச வைத்துள்ளது. ஆனால் திரையிசையில் உங்கள் சகாப்தத்தை வீழ்த்திய ரஹ்மானை போல.. சிம்பொனி, திருக்குறள் பிண்ணனி இசையென தமிழர்களின் புகழை உலகெங்கும் கொண்டு செல்லப்போகும் லிடியனும் ஜெயிப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் ராஜா.
நீங்கள் இதுவரை ஒரு இசைக்கலைஞரையும் உருவாக்கியதில்லை. ஒரே ஒரே சிறுவன் உங்களை குருவாக ஏற்று வந்தான். அவனுக்கு நீங்கள் அளித்துள்ள கசப்பான பரிசு இதுதான். உங்கள் இசையின் மேன்மையை.. உங்கள் ஆணவம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது. உங்கள் இசையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான திமிர் பிடித்த பேச்சுகளையோ, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படும் செயல்களையோ அல்ல. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தப் போவதும் இல்லை ஏனெனில் எல்லை மீறிய செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள் என்று கூறி இருக்கிறார் .






