‘கங்குவா’ படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் போஸ் வெங்கட் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர்ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல், தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருந்தார்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இந்த நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது. இவர் கடைசியாக கங்குவா, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் மக்களிடையே கடும் விமர்சனங்களுக்கு உண்டானது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் போஸ் வெங்கட் ‘கங்குவா’ படத்தின் தோல்வி, கங்குவா படத்தை மக்கள் கையாண்ட விதம் போன்ற பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார்.
போஸ் வெங்கட் பேட்டி:
அந்தப் பேட்டியில் போஸ் வெங்கட், கங்குவா மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு நான் கொடுக்கும் முதல் பேட்டி இதுதான். ஆனால் நான் மறுத்து விட்டேன். நான் பேசிய விஷயங்கள் பரவலாக பேசப்படும் பொழுது, மீண்டும் இன்னொரு விஷயம் அதேபோல பேசலாம் என்று நினைப்பவன் நான் அல்ல. என்னுடைய விவாதம் தேவைக்கும் நியாயத்திற்கு மட்டுமே இருக்கும். சும்மா பேர் வாங்குவதற்காக நான் விவாதம் செய்வதில்லை. ஆனால், இங்கே கேட்க வேண்டிய விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களை நாம் எப்படி கேட்க வேண்டும் என்றால், நாக்கை பிடுங்கிக் கொள்வது போல கேட்க வேண்டும்.
கங்குவா குறித்து:
மேலும், திரைப்படம் எடுப்பவர்கள் யாராவது பல்லாயிரம் கோடி முதலீட்டைப்போட்டு, படத்தை வெளியிட்டு 3 மணி நேரம் மக்களை சித்திரவதை செய்ய வேண்டும் என்று நினைப்பார்களா? நிச்சயம் நினைக்க மாட்டார்கள். ஒரு இயக்குனர் தன்னுடைய அதிகபட்ச கற்பனையை திரையில் காட்ட நினைப்பார். அது சில சமயங்களில் மிஸ் ஆகிவிடும். இங்கே எந்த படம் ஓடும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஏவிஎம் செட்டியாரே படத்தின் வெற்றி குறித்து சரியாக கணிக்கும் நபர் இருந்தால், என்னுடன் வேலைக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று கூறினார்.
டேய் சூர்யா, ஏய் சூர்யா:
அதுபோல கணிக்க கூடிய நபர் இங்கு யாருமே கிடையாது. கங்குவா திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவர் வெளியே வருகிறார். அவர் முன் மைக் வந்தவுடன், ‘டேய் சூர்யா, ஏய் சிவா’ என்று பேச ஆரம்பிக்கிறார். அவர்களை அப்படி பேச அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது. நானும் அவரது வீட்டுக்கு முன் சென்று, அவரது குடும்பத்தாரை திட்டினால், அவர் நிச்சயம் என் மீது புகார் கொடுப்பார். இப்படி அவர் தியேட்டர் வாசல் முன் நின்று சூர்யாவையும் சிவாவையும் திட்டினார் என்று என்னாலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். இதை நான் அப்போது பேசியதால்தான் கடுமையாக பேசுபவர்களின் தன்மை அந்த சமயத்தில் குறைந்தது.
நாங்கள் கொடுத்த அழுத்தம்:
ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் என்பது வரலாம். உங்களுக்கு ஒரு நடிகரை பிடிக்கும் என்றால், மற்றொரு நடிகர் மீது கண்டிப்பாக உங்களுக்கு வெறுப்புகள் வரலாம். அப்படி இருக்கும் நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்யும்போது, அது சரியாக இருக்கும் என்று எப்படி நம்புவது. அதேபோல் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்க்கும் 300 பேரின் கருத்தும், உங்களின் இந்த கருத்தும் எப்படி ஒன்றாக இருக்கும். அவர்களுக்கும் கருத்துக்கள் மாறுபடும் இல்லையா. கங்குவா படத்திற்கு எழுந்த நியாயமற்ற விமர்சனங்கள் இன்று ஓரளவுக்கு தன்மையாக மாறி இருப்பதற்கு காரணம், நாங்கள் கொடுத்த அழுத்தம் தான் என்று கூறி இருக்கிறார்.