நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு ஏற்பட்டிருக்கும் புது சிக்கல் குறித்த செய்திகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தனுஷ்-நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகளில் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.
நயன் – தனுஷ் சர்ச்சை :
மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதன் காரணமாக தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.
நயன்தாரா போஸ்ட் :
அதில், ‘என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் என்னும் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல் பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களை ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.
தனுஷ் தொடர்ந்த வழக்கு :
அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்களின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் Netflix நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு சிக்கல் :
இந்நிலையில், தற்போது நயன்தாராவின் ஆவண படத்துக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் வெளியிட்டு இருக்கிறார். அதாவது, நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகள் சில இடம்பெற்றிருந்தன. அந்தக் காட்சிகளை அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தியிருப்பதாக கூறி அந்த படத்தின் உரிமையாளர் நயன்தாராவுக்கும், Netfilx OTT தளத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம். அனுமதியின்றி தங்கள் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாம். தற்போது இந்த செய்தி தான் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.