தற்போது ஒயிட் லேம்ப் புரோடக்சன் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாயம். இந்த படத்தில் விஜய் விஷ்வா ஹீரோவாகவும், சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசன், தென்னவன், எலிசபெத், பெஞ்சமின் போன்ற பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார். சலிம் மற்றும் கிறிஸ்டோபர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். நாக உதயன் இசை அமைத்துள்ளார்.
படிக்கும் மாணவர்களின் மீது சாதி சாயம் பூசப்படுகிறது. அப்படி பூசப்படுவதால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் ஆர் வி உதயகுமார் கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது, ஜாதி வேண்டாம் என்று தான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன்.
பள்ளி விண்ணப்ப படிவங்களில் ஜாதி பற்றியே கேட்கக்கூடாது என்று ஒரு மசோதாவை தாக்கல் செய்து விட்டால் போதும் அதை எதிர்க்க ஒரு கும்பல் சுற்றுகிறது. மேலும், நானும் சின்ன கவுண்டர் என்ற படம் எடுத்தேன். அதற்காக அடுத்தவன் கெட்டவன் என எதையும் காண்பிக்கவில்லை. சின்ன கவுண்டர் என்பது ஒரு விவசாயத்தின் அடையாளப் பெயர். நான் வளர்ந்த கிராமத்தில் சின்ன கவுண்டர் என பெயர் வைத்திருப்பார்கள். அதை தான் நான் வைத்தேன்.
அதற்காக கவுண்டர் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என நான் எதையும் சொல்லவே இல்லை. அந்த படத்தில் கவுண்டமணி கதாபாத்திரம் உட்பட எல்லா கதாபாத்திரமும் உயர்ந்ததாக தான் இருந்தது. மேலும், சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தற்போது திரையரங்கங்கள் கிடைக்கப் பெறுவதில்லை. இயக்குனர் சாய் ரமணி சொன்னது போல கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டது. ஆனால், அது அப்படியே கிடப்பில் போய் விட்டது. இந்த ஆட்சியிலாவது கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரில் ஆவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி,பேரூராட்சி என சிறிய அளவிலான திரையரங்கு கட்டித்தர வேண்டும். சிறு பட தயாரிப்பாளர்கள் இதன் மூலம் காப்பாற்றப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று பேசினார்.