தமிழில் வடிவேலு விவேக் என்று பல காமெடி நடிகர்களுடன் நடித்த முத்துக்காளை குறித்து காதல் சுகுமார் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இது அனைவருக்குமான எச்சரிக்கைப் பதிவல்ல. மேலோட்டமாக பார்க்க முடியாது எங்க நட்பை.. நகைச்சுவை நடிகர்களாக அறியப்பட்ட எங்கள் இருவருக்கும் ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதால் ஒரு நெருக்கமான நட்பு. நேற்று அண்ணனை ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது.. தீவிரமாக ஆன்லைனில் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். “எப்பிடிண்ணே இருக்கீங்க?. படிப்பே போதையாயி போய்ட்டு இருக்கு” என்றார். ஒருகணம் பழைய நினைவுகள் வர பேச்சுக் கொடுத்தேன்.
தீவிர குடிப்பிரியராக இருந்தவர் இன்று படிப்பாளியாகி இரண்டு பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். குடியை நிறுத்த அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஒரு நொடியில் நிகழ்ந்திருக்கிறது..குடியால் ஒரு படப்பிடிப்புக்கு தாமதமாக செல்ல..வடிவேலு அவர்கள் “எழுதி வச்சிக்கோங்க..முதல்ல குடியால அல்வா வாசு சாவான்.. அடுத்த வருசத்துல முத்துக்காளை செத்துருவான்” எனக் கூற ..அந்த ஒரு வார்த்தை அவரை வருத்தியிருக்கிறது..சொன்னது போலவே அதே வருடம் அல்வா வாசு அண்ணன் இறந்து போக.
காளை குடியை நிறுத்த முயற்சித்து இரண்டு முறை தோற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் Alchohol anonymous center சென்றிருக்கிறார்.. முழுவதுமாக விட்டு ஐந்து வருடங்கள் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையைத் தொடர்கிறார் . 180 நாடுகளில் இருக்கும் அமைப்பு இது. வருத்தமளிக்கும் செய்தி என்னவெனில் நிறையத் திரைப் பிரபலங்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களில் சிலரால் நிறுத்த சிரமப்படுகிறார்கள். சினிமாவில் தடுக்கி விழுந்தால் தண்ணிமேல்தான் விழவேண்டும். எல்லாவற்றுக்கும் குடிப்பார்கள்.எனக்கும் அந்தப் பழக்கம் தொட்டுச் சென்றிருக்கிறது.
அங்கே 20 வயதினர்கள் அதிகமாக வருகிறார்கள் எனக் கூற அதிர்ந்தேன் என்னண்ணே .. ஆமா அவங்கள்ளாம் ஆறு ஏழு வயதில் பான்பராக், குட்கா என ஆரம்பித்து இப்போது போதையின் பாதையில் இருந்து மீள வருகிறார்கள்..25 வருடங்களாக ஒருவர் வருகிறார்.. குடி அடிமையாக இருந்த அவர் சொன்னது.”கையில காசு இல்ல கைக்குழந்தை கையில ஒண்ணை என்கிட்ட விட்டுட்டு என் மனைவி கவுர்மென்ட் ஆஸ்பிட்டல்ல அவளா போயி பிரசவத்துக்கு அட்மிட் ஆயிட்டா.. அக்கம் பக்கத்துல கிடைச்ச கொஞ்ச காசை கொண்டு போயி குடிச்சிட்டு அங்கயே படுத்துட்டேன்.
வீட்ல குழந்தை பசியில அழ பக்கத்துல இருந்தவங்க ரெண்டு நா கழிச்சி எனை எழுப்பி ஆஸ்பிட்டல் கூட்டிப்போயிப் பார்த்தா பொண்டாட்டி குழந்த பெத்துப் படுத்திருந்தா மேக்கொண்டு வைத்தியம் பாக்க காசில்ல பஸ்ஸுல கூட்டிட்டு வீட்டுக்கு வரேன் மனைவி உக்காந்த இடத்துல ரத்தம் கொட்டுது என்னடின்னு கேட்டா.. விரக்தியா என்னை ஒரு பார்வை பார்த்தவ. வயித்த தொட்டுப் பார்த்துட்டு. “ஆப்பரேசன் பண்ணின இடத்துல தையல் பிரிஞ்சி அந்த நூலு வழியா ரத்தம் வழியுது” என்றாள்.
நான் அப்பவே செத்துட்டேன்.. அப்போ விட்டதுதான். இங்க வந்துட்ருக்கேன் என்றார். நான் வெடவெடத்துப் போனேன்.
நண்பர்களே இது இல்லாம இருக்க முடில அப்டீங்கிறவங்க இப்பவே கொஞ்சம் கொஞ்சமா விட்ருங்க.. இல்லன்னா இந்த சென்டருக்குப் போங்க ஒருபா செலவில்லாம மீளமுடியும். அதுக்கு சாட்சி இதோ எங்க Muthukalai Muthukalai அண்ணன்.. அவரையும் தொடர்பு கொள்ளலாம். எல்லா ஊர்களிலும் நடத்துகிறார்கள்.
யாரோ ஒருவருக்கு உதவிடக் கூடும்.
கனத்த மனதுடன் சுகுமார்.