டிடி நெக்ஸ்ட் லெவல் படம் தொடர்பாக சந்தானம் நற்பணி மன்றம் சார்பாக காவல் ஆணையத்தில் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின் சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான்.

தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து இருந்தார். அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார். பின் சந்தானம் பிரபலமான காமெடி நடிகர் ஆனார். சந்தானம் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் சமீப காலமாக சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
டிடி நெக்ஸ்ட் லெவல்:
அதோடு தமிழ் சினிமாவில் காமெடியனாக கொடி கட்டி பறந்த சந்தானம் சில வருடமாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இயக்குனர் சுந்தர்.சி இயக்கி விஷால் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வசூலையும் செய்து இருந்தது. தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். தில்லுக்கு துட்டு படம் வரிசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
இந்த படத்தை ஆர்யா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை முழுவதுமாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சந்தானம் நற்பணி மன்றம் புகார்:
இந்த நிலையில் படத்தை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய சந்தானம் நற்பணி மன்றம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்துகிறது. அந்த புகாரில் சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில், சந்தானம் நடிப்பில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி டிடி நெக்ஸ்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் போது சில தினங்களுக்கு முன்பு மினி மூவி தமிழ் என்ற இன்ஸ்டா ஐடி மூலமாக படத்தை பகுதி பகுதிகளாக பிரித்து முழு படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

புகாரில் கூறியது:
இதனால் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் நூற்றுக்கணக்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த இழப்பை ஏற்படுத்திய மினி மூவி தமிழ் இன்ஸ்டா ஐடியின் உரிமையாளரை கைது செய்வதோடு அந்த இன்ஸ்டா விடியோவை உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பான புகார் மனுவை காவல் ஆணையத்தின் அலுவலகத்தில் நாங்கள் கொடுத்திருக்கிறோம். காவல் ஆணையரும் இது குறித்த நடவடிக்கை எடுப்பதாக கூடியிருக்கிறார்கள்.






