கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே திண்டாடி வருகின்றது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 6412 பேர் பாதிக்கப்பட்டும், 199 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அப்படி வெளியில் செல்பவர்கள் தங்கள் முகத்தை மாஸ்க் போட்டு மூடிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா முழுவதும் தற்போது மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பலருக்கும் மாஸ்க், கையுறை போன்ற உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.
தற்போதுள்ள சூழலில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் மாஸ்க் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு இவற்றை கிடைக்க வழி செய்யும் விதமாக பல இடங்களில் தற்போது மாஸ்க் தைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் தானாக முன்வந்து ஜெயிலுக்குள் கைதிகளுடன் ஒன்று சேர்த்து மாஸ்க் தயாரித்து வருகிறார்.
கேரள அரசாங்கம் மாஸ்களை தயாரிக்க சிறைக்கைதிகளை பயன்படுத்தியுள்ளார்கள். ஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் நடிகர் இந்திரனஸ் அவர்கள் ஆர்வம் கொண்டு முன்வந்து கைதிகளுக்கு மாஸ்க் தயாரிப்பது எப்படி என்ற பயிற்சியை அளித்து வருகிறார். சிறையில் கைதிகள் மக்களுக்காக மாஸ்க் தயாரித்து கொடுக்கின்றனர். கேரள அரசாங்கத்தின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், நடிகர் இந்திரன்ஸ் தானே முன்வந்து ஜெயில் உள்ள கைதிகளுடன் சேர்ந்து மாஸ்க்கை தயாரிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் நடிகர் இந்திரன்ஸ் செயலை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
நடிகரின் இந்திரன்ஸ் அவர்கள் மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார். இவர் சினிமா உலகில் காஸ்ட்யூம் டிசைனராக தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு தான் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கூட ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார்.