தொகுப்பாளினி டிடி சிகிச்சை பெற்று வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு இவர் பேச்சு திறனாலும், சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் மீடியாவில் பயணித்து கொண்டு வருகிறார். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.

அதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் 'காபி வித் டிடி' என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் சினிமா பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து இருந்தார்கள். அதன் பிறகு தான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
டிடி குறித்த தகவல்:
இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், தடைகளை தாண்டி சினிமா துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. இவர் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார் . அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த 'காபி வித் காதல்' படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இடையில் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதனால் இவர் பெரும்பாலும் சேரில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

டிடி உடல் பிரச்சனை :
இதன் காரணமாக சில ஆண்டுகளாகவே இவர் பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக விஜய் டிவியில் இவர் எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில்லை. இவர் சமீப காலமாக சினிமா நிகழ்ச்சி, பிரபலங்கள் பேட்டி மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவரை மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது டிடி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டிடி பதிவு:
அதில் அவர், கடந்த மூன்று மாதங்களாக சோதனை காலமாக இருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய மூட்டில் ஒரு சர்ஜரி செய்து கொண்டேன். அது மொத்தமாகவே மூட்டு மாற்றும் சர்ஜரி. கடந்த 10 ஆண்டுகளில் என்னுடைய மூட்டுக்காக நான் நான்கு சர்ஜரி செய்திருக்கிறேன். என்னுடைய வலது காலில் இது தான் நான் செய்து கொள்ளும் கடைசி சர்ஜரி ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடவுளையும் வேண்டிக் கொள்கிறேன், அதிலிருந்து மீண்டு வர ரொம்ப வலியாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்னை நேசிக்கும், எனக்கு ஆதரவாக இருக்கும் என் வலியை உணர்ந்தவர்களுக்கு இதை பதிவு செய்கிறேன்.
View this post on Instagram
அறுவை சிகிச்சை குறித்து சொன்னது:
இப்போதும் இத்தனை எதிர்பாராத அன்பு கிடைத்ததற்கு நான் என்ன செய்தேன் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களாக எனக்காக வேண்டிக் கொண்டு எனக்கு பக்கபலமாக இருந்த மக்களுக்கு எனது இதயத்தில் இருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். இப்போது ஒரு வெளிச்சம் இருக்கிறது. மிகுந்த பலத்துடன் கண்டிப்பாக திரும்பி வருவேன் என்று உறுதி அளிக்கிறேன். 10 ஆண்டுகளாக என்னை வாழ்த்தி என்னுடன் இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் தயவு செய்து என்னுடைய அருகில் வந்து ஹாய் சொல்லுங்கள். எத்தனை நல் உள்ளங்கள் என்னை ஆசீர்வதித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்னும் கூடிய விரைவிலேயே உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். புதிய மூட்டு, புதிய நாள் என்று கூறியிருக்கிறார்.






