பிரபல நடிகர் டெல்லி கணேஷ் குறித்து அவரது மகன் மகாதேவன் கணேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ் பெற்ற மிகச்சிறந்த குணசித்திர நடிகர் தான் டெல்லி கணேஷ். விமானப்படையில் பணியாற்றி வந்த டெல்லி கணேஷ், மேடை நாடகங்கள் மீது உள்ள காதலின் காரணமாக தன்னுடைய பணியில் இருந்து விடுபட்டு டெல்லியை சேர்ந்த ஒரு நாடக சபாவின் சார்பாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

அதற்குப் பிறகு, கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான, 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய டெல்லி கணேஷ் வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று தன்னிடம் கொடுக்கப்படும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்தியவர். டெல்லி கணேஷுக்கு மகாதேவன் என்கிற மகன் உள்ளார். தன் மகனை வைத்து கூட டெல்லி கணேஷ் ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த நவம்பர் 9ஆம் தேதி இரவு உறங்கச் சென்ற டெல்லி கணேசஷின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவர் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
மகாதேவன் கணேஷ் பேட்டி:
தற்போது தனது அப்பா குறித்து மகாதேவன் கணேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், என்னுடைய அப்பா என்னை வைத்து படம் எடுத்தது உண்மைதான். படத்துக்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. 2016இல் , ப்ரொடியூசர் கவுன்சில இருந்து ஒரு மீட்டிங் கூப்பிடும்போது, 'மூன்று கோடி ரூபாய்க்கு ஒரு படம் எடுத்தால் அதை தியேட்டரில் ஒருத்தன் உப்மா படம் என்கிறான். மூணு கோடி போட்டு 3 லட்சம் வந்தா, ஒரு ப்ரொடியூசர் எப்படி மீட்டிங்குக்கு வருவான்' என்பது போல் சொல்லி இருந்தார். சின்னப் படங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றி பேசுங்கள் என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=x7isyaECnx0
தனது அப்பா குறித்து:
ஆனால், எல்லாரும் என்னால மூணு கோடி லாஸ் ஆச்சு என்று அதை பற்றி மட்டும் தான் பேசுறாங்க. அப்போது எங்க அப்பா சொல்ல வந்தது அது கிடையாது. இப்ப கூட அந்த ஆடியோ எங்கேயாவது இருக்கும். ஆனால், எல்லாரும் எங்க அப்பாவுக்கு நஷ்டத்தால தான் இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க. அவருக்கு உண்மையாக இருந்த கஷ்டம் அந்த படம் மக்களை சேராதது தான். பண நஷ்டத்தை பற்றி அவர் ஒரு இடத்தில் கூட பேசி இருக்க மாட்டார். எல்லா அப்பாக்கள் மாதிரி தான் என்னுடைய அப்பாவுக்கும் நான் நல்லா வரணும்னு ஆசை.
அப்பாவுக்கு வருத்தமாக இருக்கும்:
என்னைப் பற்றி நினைத்து, ராத்திரியில் இறந்து போற அளவுக்கு அவர் கிடையாது. அவர் ஒரு ஆர்மி மேன். எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற மாதிரி வருத்தம் தான் என்னுடைய அப்பாக்கு இருந்தது. ஆனால், என்னை நினைத்து தான் எங்க அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப தப்பா இன்டர்வியூ எல்லாம் பேசுறாங்க. உண்மைய சொல்லணும்னா நம்ம புள்ள மேல பழியை போடுறாங்களே என்று இப்பதான் அப்பாக்கு வருத்தமாக இருக்கும். அதே மாதிரி, அப்பாவோட மரணம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது. அடுத்த நாள் காலையில் நன்றாக தான் எழுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இடி விழுந்த நாள் அது.

ஆசிர்வாதம் எப்போவும் இருக்கும்:
எல்லாரும் கடைசியா என்ன சொன்னாரு என்று கேட்கிறார்கள். கடைசியா அவர் பேசப்போறார்னு எங்களுக்கு எப்படி தெரியும். எங்க அப்பா நடித்த படங்களில் பசி, குடிசை போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் எங்க அப்பா சொல்ற டயலாக் எல்லாம் எனக்கு ரொம்ப ஃபேவரைட். அதே மாதிரி, நான் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன் என்று எங்க அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். ஆனால், எனக்கு எதிர்காலத்தில் கல்யாணம் நடந்தால் கூட எங்க அப்பாவோட ஆசிர்வாதம் எப்போதுமே இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று எமோஷனலாக பேசியுள்ளார்.






