உலகம் முழுவதும் கொரோனாவின் சீற்றம் ஜெட் வேகத்தில் பரவி வருவதால் மக்கள் அல்லல் பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனாவினால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் வருமாறும், தேவைகள் இல்லாமல் வாகனங்களில் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் சென்னை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயத்தில் விதிமுறைகளை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் தற்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் மதுபாட்டில்களை கொண்டு சென்ற சினிமா தயாரிப்பாளர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தற்போது இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது காரின் முன்பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது.
அந்த ஸ்டிக்கர் ஒட்டிய காரை போலீஸ் மடக்கி சோதனை செய்தது. சோதனை செய்த போது காருக்குள் விலையுயர்ந்த மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த நபர்கள் போலீஸ் அதிகாரியின் உறவினர் என்று தெரிய வந்தது. பிறகு அந்த நபர்கள் அந்த போலீஸ்காரின் அடையாள அட்டையை காண்பித்தனர். விசாரணையில் அந்த போலீஸ் அதிகாரி ஓய்வு பெற்றவர் என்பதும் அவருக்கு தெரியாமல் தான் காரில் மதுபானம் கடத்தியது என்றும் தெரியவந்தது. இதையடுத்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் கலைசெல்வன்(34), ஆனந்தராஜ் (28).
கலைசெல்வன் தாம்பரம் அடுத்த படப்பையைச் சேர்ந்தவர். இவர் தாதா 87 பட தயாரிப்பாளர் ஆவார். அவரது நண்பர் தான் ஆனந்தராஜ். இவர் மருத்துவ துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் மதுபானங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்ய முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 240 ரூபாய் விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.