குபேரா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் தனுஷ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
குபேரா படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட தனுஷ், இந்த படம் வெற்றி அடைந்ததற்காக நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்கிறேன். இந்த படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்குமே ரொம்ப நன்றி. இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே கேள்விக்குறியாக இருக்கிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் போன்ற ஆக்சன் படங்களுக்காக மட்டும் தான் மக்கள் தியேட்டர்கள் சென்று பார்க்கிறார்கள். ஆனால், மனித உணர்வுகளும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை குபேரா படத்தின் மூலம் இயக்குனர் நிறுப்பித்திருக்கிறார்.

விழாவில் தனுஷ் சொன்னது:
மனித உணர்வுகளை விட வேறு எதுவுமே முக்கியம் கிடையாது. எதிர்கால இயக்குனர்களுக்கும் இது போன்ற படங்கள் எடுப்பதற்கு நம்பிக்கையாக இருக்கும். பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள் தான் கைகொடுக்கும் என்ற எண்ணமே அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு வரக்கூடாது. சமீபத்தில் கூட டூரிஸ்ட் பேமிலி படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேச வேண்டும் என்று என்னுடைய அம்மா சொல்லி இருக்கிறார். இனி நான் அதிகம் பேசப்போவதில்லை. குறைவாக தான் பேசப் போகிறேன். நம்முடைய ஆசிர்வாதங்களை கணக்கில் கொள்வது முக்கியமான ஒன்று. தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பது ரொம்ப முக்கியம் என்று என் அப்பா சொல்வார். என் தயாரிப்பாளர் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்

படத்தின் கதை:
படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நீரஜ் க்ளோபல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எண்ணைய் மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். பின் நீரஜ், இந்த திட்டத்தை தன்னுடைய பெயரிலோ, நிறுவனத்தின் மூலமோ செய்யக்கூடாது என்று நாகார்ஜுனாவை வைத்து செய்ய திட்டம் போடுகிறார். நாகர்ஜுனா முன்னாள் சிபிஐ
அதிகாரியாக இருந்தவர். இவர் சிறையில் இருக்கிறார்கள். நேர்மையாக இருந்துமே அரசாங்கம் தனக்கு குற்றவாளி பட்டம் சுமத்தியதால் அவருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர் நீரஜினுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின் நீரஜ் ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் மீதி வெள்ளை பணமாகவும் தர வேண்டும். இதில் எனக்கும் என்னுடைய நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு நாகர்ஜுனா இதை பினாமி மூலம் செய்கிறார். அதற்காக இவர் பிச்சைக்காரர்களை வைத்து பரிவர்த்தனை நடத்துகிறார். மேலும், பணம் கை மாறிய பிறகு அந்த பிச்சைக்காரர்களையும் கொன்று விடுகிறார்கள். அப்படி தான் இந்த இந்த பிரச்சினையில் தனுஷும் சிக்கிக் கொள்கிறார். ஊர் முழுவதுமே தனுஷை சல்லடை போட்டு தேடுகிறார்கள். இதற்கு இடையில் தனுஷ், ராஸ்மிகாவை சந்திக்கிறார். இறுதியில் தனுஷ் என்ன ஆனார்? கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதா? ராஸ்மிகா நிலை என்ன? நாகார்ஜுனா என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






