தனுஷ் கால்ஷீட் விவகாரம் தொடர்பாக 5 ஸ்டார் பட நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தனுஷ் குறித்த தகவல்:
இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் இட்லி கடை என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

தனுஷ் மீது குற்றச்சாட்டு:
இது மட்டும் இல்லாமல் வேறு சில படங்களிலும் தனுஷ் நடிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் தங்களுடைய படத்தில் நடிப்பதாக சொல்லி முன் பணம் வாங்கிவிட்டு இதுவரை படப்பிடிப்புக்கு கால்ஷீட் கூட அளிக்காமல் இருக்கிறார் என்று பைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி குற்றம் சாட்டுகிறார். மேலும், இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (fefsi) ஆர்.கே செல்வமணி கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
பைவ் ஸ்டார் நிறுவனத்தின் அறிக்கை:
அதில் அவர், R.K.செல்வமணி அவர்களுக்கு 06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations LLP பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன் முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.
அதனைப் புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்குப் படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures திரு.ஆகாஷ் அவர்களின், "இட்லிகடை படப்பிடிப்பு நடக்கவேண்டும், மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ?

மேலும், October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாகப் படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே திரு. தனுஷ் அவர்கள் நடித்த 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களைத் தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன். அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம்.
October 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு, இன்று திரு.கதிரேசன் பிரச்னை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது. மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே, நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே.. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






