தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது. ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது.
தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடல் வெளியானது.
இந்த பாடலில் நடிகர் தனுஷின் உருவத்தை சுவற்றில் கரியால் வரைந்து இருப்பார்கள். ஆனால், உண்மையில் அது மேலவளவு முருகேசன் என்று ட்விட்டரில் பாபு ரவீந்தர் என்பவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மேலவளவு முருகேசன் நம் தலைமுறையின் போராளி. 1996 மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. கள்ளர் சாதி மக்கள், எங்களுக்கு ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரா? என்று சாதி இந்துக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணித்தனர்.
28-12-1996 அன்று நடந்த தேர்தலில் தலித் மக்கள் மட்டும் வாக்களித்தனர் இருந்தும் என்ன பயன் தலித்துகளை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டனர். மீண்டும் 31-12-1996ல் கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது மீண்டும் தலித்துகள் மட்டுமே வாக்களித்தனர். இறுதியில் மேலவளவு முருகேசன் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர் தெருவில் இருந்ததனால் அவர் அலுவலகம் செல்ல முடியாத சூழல். பிறகு சாதி இந்துக்கள் அண்ணன் முருகேசனுடன் நன்றாக பழகி ஊராட்சிமன்ற ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
10-09-1996 தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தலித் மக்கள் பலவித பிரச்சனைகள் சந்தித்தனர் அதில் மூன்று தலித்துகளின் வீடு கொளுத்தப்பட்டது, அவர்களுக்கு நிவாரணம் பெற்றுதர 30-07-1997 அன்று மாவட்ட ஆட்சியர் சந்திக்க அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பும் போது,பேருந்து பழைய கள்ளுக்கடை என்ற இடத்தை நெருங்கியது 30 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய குழு பேருந்தை வழிமறித்து மேலவளவு முருகேசன் உட்பட 7 பேரையும் படுகொலை செய்தனர். முருகேசன் தலையை மட்டும் தனியாக துண்டித்து 1/2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
90 நாட்கள் மேலாகியம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாததால் அவர்கள் அந்த சமயத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு கழகங்களும் போட்டி போட்டு கொண்டு அவர்களுக்கு விடுதலை அளித்தது குறிப்பிடத்தக்கது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கீழ் சிலர், இந்த சம்பவத்தின் செய்தி வெளியான பத்திரிகை செய்தி ப்குதிகளையும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த படம் 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.