இஸ்லாமிய மதம் தொடர்பாக வெளியான படங்கள் குறித்து இயக்குனரும் நடிகருமான அமீர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். பின் இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.
மேலும், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது.
அமீர் வெளியிட்ட அறிக்கை:
மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான அமீர் தி கேரளா ஸ்டோரி மற்றும் ஃபர்ஹானா படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது.
இஸ்லாமிய படம் குறித்து சொன்னது:
மேலும், இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்ற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருகிறது. இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தையும்,
ஃபர்ஹானா’ திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. இஸ்லாமியர்களை பற்றி இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
மத ஒற்றுமை குறித்து சொன்னது:
மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இத்திரைப்படத்தில் அவர் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத்திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை. எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லாத் திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம்.
போலீஸ் பாதுகாப்பு:
இதை நான் இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டு இருக்கிறது.