வணங்கான் பட விழாவில் சூர்யா குறித்து இயக்குனர் பாலா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
பாலா 25 மற்றும் வணங்கான் நிகழ்ச்சி:
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விழாவும், பாலாவினுடைய திரைப்பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 'பாலா 25' விழாவும் இணைந்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இதில் வணங்கான் படக்குழுவுடன் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலா, பாண்டி பஜாரில் இருந்து திரைப்பட விழா ஒன்றுக்கு அழைத்து செல்லும்படி சூர்யாவிடம் கேட்டிருந்தேன்.

விழாவில் இயக்குனர் பாலா:
அப்போதுதான் என்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகனாக அவரை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், அதை நான் அப்போது அவரிடம் செல்லவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அதை அவரிடம் சொன்னேன். சூர்யாவுடன் பணியாற்றும் போது ஒரு நடிகரோடு வேலை செய்தது போலவே தோன்றாது. ஒரு தம்பியோடு வேலை செய்தது போல தான் இருக்கும். சூர்யா எதுவாக இருந்தாலும் என்னிடம் வெளிப்படையாக சொல்லுவார். அவர் நான் இயக்கிய படம் குறித்து கருத்து சொல்வார். மேலும், நான் சூர்யா இருக்கும்போது புகை பிடிக்க மாட்டேன். காரணம், சிகரெட் பிடிக்கும்போது சிலர் அட்வைஸ் செய்வார்கள். ஆனால், சூர்யா மட்டும்தான் நான் சிகரெட் பிடித்தால் வருத்தப்படுவார்.
சூர்யா குறித்து சொன்னது :
ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது. ஆனால், தம்பியாக இருந்ததால் தான் அவருக்கு என் மீது அவ்வளவு அக்கறை. அவன் இவன் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா வந்த போது அவருக்கு தெரியாமல் பெரிய மானிட்டர் பின்பு நான் சிகரெட் பிடித்தேன். அதை சூர்யா நடித்துக்கொண்டே பார்த்துவிட்டார். பின் நான், சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொண்டேன் என்று சொல்லும்போது சூர்யா, இல்லை நீங்கள் இந்த காட்சியை எடுக்கும் போது எட்டு முறை பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு என்னை அவர் கவனித்தார் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சூர்யா சொன்ன விஷயம்:
அவரை அடுத்து சூர்யா, எனக்கு சிகரெட் பிடிக்கவே தெரியாது. நந்தா படத்தின் போது எனக்கு முதலில் புகைபிடிக்க சொல்லித் தந்தது இயக்குனர் பாலா தான். முதல் காட்சியிலேயே நான் படிக்கட்டில் இருந்து இறங்கும் போது சிகரெட் பிடிக்க வேண்டும் என்று சொன்னார். சிகரெட் பிடிக்க தெரியாது என்று சொன்னால் அசிங்கமாக இருக்கும் என்று கூச்சப்பட்டேன். இருந்தாலுமே வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு தான் அவர் எனக்கு சிகரெட் பிடிப்பதை கற்றுத் தந்தார். ஒரு 300 தீக்குச்சியாவது நான் அந்த காட்சியின் போது பயன்படுத்தினேன். அப்போது அவர் கற்றுக் கொடுத்தது தான் ரோலெக்ஸ் படத்திற்கு எனக்கு உதவியாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.






