தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் பிரதாப் போத்தன். இவர் கேரளாவில் பிறந்த சிறு வயதிலேயே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். பின்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு மேடை நாடகங்களில் பிரதாப் போத்தன் நடித்தார். இவருக்கு சிறு வயதிலிருந்து சினிமாவிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இவரது அண்ணன் ஹரி ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பது தான்.
கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் காப்பி ரைட்டர் வேலைக்கு சென்று இருந்தார் பிரதாப் போத்தன். அங்கே இயக்குனர் பரதன் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் மலையாளத்தில் பரதன் இயக்கிய ‘தகரா’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் பிரதாப் போத்தனுக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் பாலு மகேந்திரா இவருடைய ஆல்பத்தை பார்த்துவிட்டு இவரை வைத்து அழியாத கோலங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார். அந்த படம் இயக்கும்போது பாலு மகேந்திரா பெரிய இயக்குனர் எல்லாம் கிடையாது. அவர் இயக்கிய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திரா கொடுத்த வாய்ப்பு :
இந்த படத்தில் பிரதாபின் நடிப்பு பாலுமகேந்திராவிற்கு மிகவும் பிடித்துப் போக அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களிடம் இவரை சிபாரிசு செய்து நடிக்கவும் வைத்தார். மேலும், இவருக்கு நிறைய நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இப்படி இவர் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்துகொண்டு இருக்கும் போதே நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டு இவர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிரதாப் போத்தன் மறைவு:
ஆனால், அவரையும் திருமணமான 22 ஆண்டுகளில் விவகாரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிக்கு கேயா என்ற மகளும் இருக்கிறார். அவரும் இவரை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்லக் தர்பார் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இடையில் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்தார் பிரதாப் போத்தன். இந்நிலையில் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொன்மகள்வந்தாள் இயக்குனர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக் அளித்த பேட்டி:
இந்நிலையில் பிரதாப் போத்தன் மறைவிற்கு பொன்மகள்வந்தாள் இயக்குனர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, காலையில் செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மனசு கஷ்டமாக இருக்கிறது. முந்தா நாள்தான் அவர் என்கிட்ட பேசினார். அவர் இப்ப நடிக்கிற மலையாள படத்தோட ஷூட்டிங் மைசூரில் நடந்துட்டு இருக்கு. அதை முடித்து விட்டு வந்து இருந்ததாக சொன்னார். அவர் எப்போ எனக்கு போன் செய்தாலும் முதல் வார்த்தையே லவ் யூ மேன் எங்கே இருக்க என்று தான் கேட்பார். உரிமையாக பேசுவார். சாரோட ஒர்க் பண்ணினது சந்தோசமான தருணங்கள். ஊட்டியில் கிளைமாக்ஸ் சீன் எடுக்கப்ப நல்ல குளிர்ச்சி.
பிரதாப் போத்தன் குறித்து சொன்னது:
செயற்கை மழை பெய்ய வைத்து சீனை எடுத்து இருந்தோம். அந்த மழை மீது அவர் ராத்திரி நடந்தது வரப்ப என்னப்பா 17 டிகிரி குளிரில் வயசான வரை மலை மேலே நடக்க வைக்கிறீங்களே! என்று ஜோக் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். ஆனால், சூட் முடிகிறவரை சந்தோஷமாக தான் வேலை செய்து கொடுத்தார். ஜோதிகா மேடமுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அந்த நாட்களில் அவரை சுத்தி இருக்கிறவங்க கலகலப்பாக வைத்துக் கொண்டார். நான் இயக்கிய எல்லா படங்களிலும் அவரை நடிக்க வைக்கணும் என்று ஆசைப்பட்டது ஆசையாகவே போனதால வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.