தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் மக்கள் மட்டுமின்றி, திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.
1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த ‘பல்லவி அணு பல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். பிறகு இவர் இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் ‘செக்கச்சிவந்த வானம்’.
35 ஆண்டுகள் கடந்த நாயகன் :
தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த நிலையில் கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த நாயகன் படம் குறித்து இயக்குனர் மணிரத்தினம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதில் அவர், மும்பையில் தங்கி இரண்டு ஆண்டுகள் படித்து வந்த காலத்தில் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்ட வரதராஜ முதலியார் குறித்து நான் அறிந்து வைத்திருந்தேன்.
படத்தில் நாயக்கர் நிஜயத்தில் முதலியார் :
பின்னர் நான் இயக்குனர் ஆனவுடன் கமலஹாசனை வைத்து அந்த படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வரதராஜ முதலியார் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்தேன். மேலும், நாயகன் படம் மும்பை தாதா வரதராஜ முதலியார் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தாலும் படத்தை துவக்குவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் மூலம் வரதராஜ முதலியாரை நேரில் சந்திக்க கேட்டு இருந்தேன். அப்போ அவர் சென்னை சாந்தோம் பகுதியில் ஒரு வீட்டின் அண்டர் கிரவுண்டில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
வரதராஜ முதலையருடன் சந்திப்பு :
அதன் பின் நான் வரதராஜ முதலியாரை சந்தித்து அவருடைய வாழ்க்கையை படமாக எடுக்க விரும்புவதாக கூறி இருந்தேன். அதற்கு அவர், இந்தி இயக்குனர் ஒருவர் வந்து என்னை வைத்து படம் எடுக்க அனுமதி கேட்டார். ஆனால், படத்தில் என்னை வில்லனாக காட்டியிருந்தார். சினிமாக்காரங்க எப்போதுமே எங்களை வில்லனாகவும், கெட்டவனாகவும் தான் காட்டுகிறார்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். பின் என்னை சாப்பிடுகிறீர்களா? என்று வரதராஜன் கேட்டார். உடனடியாக அங்கு தோசையை வரவைத்து என்னை சாப்பிட சொன்னார். பின் அவரே தோசையை பிட்டு சட்னியில் தொட்டு வற்புறுத்தி வாயில் ஊட்டி விட்டார். எனக்கு பதட்டமாக இருந்தது.
வரதராஜ முதலியார் பதுங்கி இருந்த காரணம் :
மேலும், சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்த வரதராஜ முதலியார் சென்னையில் பதுங்கி இருப்பது போலீசுக்கு பயந்து அல்ல என்றும், தான் விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டாள் கூட்டத்தை பயன்படுத்தி என்னை எளிதாக கொலை செய்துவிடுவார்கள் என்பதற்காகவே வரதராஜ முதலியார் பதுங்கி இருந்தாக கூறினார். இதனை வைத்தே நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வேலு நாயக்கர் விடுதலையாகி வரும் போது சுட்டுக் கொல்லப் படுவது போல காட்சிப்படுத்தப்பட்டது. கமலஹாசனின் திறமையான நடிப்பால் நாயகன் படம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறி இருந்தார்.