சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு தலைப்பு உருவான விதம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘அயலான்’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம்:
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட தயாராக உள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால், தற்போது அமரன் படக்குழுவினர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கலந்து கொண்டிருந்தார்.

ராஜ்குமார் பெரியசாமி பேட்டி:
அப்போது அவர், சிவகார்த்திகேயன் படத்தின் பிரமோஷனில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்று ஒரு தனி அட்டவணை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் முருகதாஸ் சாருடைய படம் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருக்கார். இந்த பிசியான நேரங்களிலும் அவர் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்று கொண்டு தான் இருக்கிறார். ட்ரைலரின் முதலில் நீங்க பார்த்த முகந்த் வரதராஜனுடைய காணொளியை தான் நானும் முதலில் பார்த்தேன். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததுமே அவரைப் பற்றி பார்ப்பதற்கு இந்த காணொளி தான் இருந்தது.
படம் உருவான விதம்:
அந்த வீடியோவில் என்னுடைய மூன்று வயது குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயத்தை அவர் சொல்லிக் கொடுத்தது எனக்கு ரொம்ப முக்கியமாக தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் முகுந்த் வரதராஜனுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பின் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்திற்கு நடிகர்களுக்கான தேடல் நடந்தபோது சிவகார்த்திகேயன் பெயர்தான் எல்லோருக்குமே ஞாபகத்திற்கு வந்தது. படத்தினுடைய ஸ்கிரிப்ட்டை ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி அனுமதி வாங்கினோம். படத்தினுடைய வேலைகளும் முழுமையாக முடிந்த ராணுவ அதிகாரிகளுக்கு படத்தை போட்டு காண்பித்தோம்.

படத்தின் தலைப்பு காரணம்:
கமல் சார் படத்தை பார்த்ததும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிடலாம் என்று சொன்னார். அவர் படம் பார்த்துவிட்டு என்னென்ன விஷயங்கள் சொன்னார் என்பதை படம் ரிலீசுக்கு பிறகு சொன்னால் தான் நன்றாக இருக்கும். இந்த படத்துக்கு அமரன் என்ற தலைப்பு சரியானதாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அந்த சொல்லுக்கு மரணம் இல்லாதவன் என்று பொருள். டெல்லியில் அமர் ஜவான் ஜோதினு ஒரு இடம் இருக்கு. மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக அங்கு விளக்கு ஏற்றுவார்கள். அமர் ஜவான் என்றால் மறைந்த வீரன் என்று பொருள். அதுதான் சரியான தலைப்பு என்று எனக்கு தோன்றியிருந்தது. அதனால் தான் பழைய படங்களின் தலைப்பை புதிய படத்தில் வைப்பதற்கு சில விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் பின்பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைப்பையும் வாங்கினோம் என்று கூறி இருக்கிறார்.






