தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் எப்போதும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். நடிகர் தனுஷ் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு இவர் தான் காரணம். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, இரண்டாம் உலகம் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.
கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் என்.ஜீ.கே. இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து இவர் புதிய படம் இயக்குவதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே இயக்கி முடிந்தது. ஆனால், இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செல்வராகவன் அவர்கள் தற்போது டுவிட்டரில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை எழுதத் தொடங்கி விட்டதாக கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி உள்ளார்கள். மேலும், நெட்டிசன்கள் செல்வராகவன் இயக்கும் அடுத்த படம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது புதுக்கோட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதே போல் சமீபத்தில் செல்வராகவன் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்போவதாக ரசிகர்கள் ஆவல் உடன் இருந்தார்கள். ஆனால், செல்வராகவன் அவர்கள் ட்விட்டரில் கூறி இருப்பது, என் மனதுக்குள் கேட்கும் தீராத ஆசை ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்க வேண்டும் என்பது தான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் கனவு என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவர் படத்திற்கான கதையை தயார் செய்கிறேன் என்று கூறியவுடன் இது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.