இந்தியன் 2 தாமதமாவது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் அப்பா கமலின் மனைவி வேடத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கிறார். அதாவது இந்தியன் முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சித்தார்த் அவர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார். நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதையும் பாருங்க : அவர் இப்போ என்ன கேட்டுட்டார்னு இப்படி Rude ஆ பேசுறீங்க – அனிதா சம்பத்திற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.
அதே போல நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர், இந்தியில் ‘அந்நியன்’ பட ரீ-மேக்கை அறிவித்தார். இப்படி ஒரு நிலையில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதற்கிடையில் 2 மாதங்களில் இந்தியன் 2 பட வேலைகளை துவங்கி, முடிப்பதாக ஷங்கர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையும் ஏற்க லைக்கா நிறுவனம் மறுத்து விட்டது. மேலும், இயக்குனர் ஷங்கரின் தாமதத்தால் தான் இந்தியன் 2 படபிடிப்பு தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது என்றும் லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கில் சங்கர் பதில் மனு அளித்துள்ளார்.
அதில், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார்.தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார்.
நடிகர் கமலுக்கு ‘மேக் அப்’ அலர்ஜி ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாகவும், பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய தொகை கிடைக்காததால் தற்போது வேறு படங்களில் பணியாற்ற சென்று விட்டதாகவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.