'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடலின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் தஞ்சை செல்வி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தெட்சிணாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் நாட்டுப்புறப் பாடகி ஆவார். குறிப்பாக, இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஈசன் படத்தில் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவருடைய குரலால் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து இருக்கிறார். இதை அடுத்து இவர் ஏரளமான நாட்டுப்புற பாடல்களையும் பாடியிருக்கிறார். கிராமத்து மண்வாசனை மாறாமல் இவருடைய பாடல்கள் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடு வரையும் சென்று இருக்கிறது. இவர் வருடம் வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடுவார்.
பாடகி செல்வி:
இப்படி இருக்கும் நிலையில் கொரோனாவால் இவருடைய வாழ்க்கையே மாறியது. கொரோனாவுக்கு பின் இவருக்கு பெரிதாக பாட வாய்ப்பு வரவே இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார் செல்வி. வட்டிக்கு மேல் வட்டி கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவதற்கு ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். தற்போது இவர் முடவாதம் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட காசு இல்லாமல் அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தஞ்சை செல்வி, ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் தான் நான் பிறந்தேன்.

செல்வி பேட்டி:
நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். முறையாக எல்லாம் நான் இசை கற்றுக்கொள்ளவில்லை. ரேடியோ, டிவி என்று காதில் கேட்கிற பாட்டையெல்லாம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு பாடினேன். என்னுடைய வீட்டுக்காரர் ஐயப்பன் கிராமிய பாடகர் தான். ரெண்டு பேரும் நிறைய மேடைகளில் பாடி இருக்கிறோம். அதன் பின் தான் நாங்கள் கல்யாணமே செய்து கொண்டோம். 2009ல் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

குடும்ப நிலைமை:
நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் அண்ணன் மூலமாக தான் அந்த முதலில் வாய்ப்பு வந்தது. சசிகுமார் சார் தான் எனக்கு ஜில்லா விட்டு ஜில்லா பாட்டை பாட வாய்ப்பு தந்தார். அதற்குப்பின் படங்களில் எல்லாம் பாடி இருக்கிறோம், மேடைகளில் பாடியிருக்கிறோம். நான் பாடுன முதல் பாடலை கேட்டு எல்லோரும் நன்றாக இருக்கும் சொல்லும்போது ரொம்ப சந்தோசமாக இருந்து. அதற்கு பிறகு சுந்தர் சி சார், தேவா சார், கண்ணன் சார், இளையராஜா படங்களில் பணியாற்றி அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கிறேன். நல்லா தான் என் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கொரோனா வந்ததால் அப்படியே என்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது.
https://www.youtube.com/shorts/YuBiv81ZXbk
உதவி கேட்கும் செல்வி:
கொரோனாவால் எல்லா நிகழ்ச்சிகளுமே நின்று விட்டது. எந்த நிகழ்ச்சிகளுமே இல்லை. அதனால் எனக்கும் என்னுடைய வீட்டுக்காரருக்கும் வேலையே இல்லை. வருமானம் சுத்தமாக இல்லாமல் போனது. பாட்டு பாடுவதை தவிர எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. பிழைப்புக்காக வழியில்லாமல் எங்க அப்பா வீட்டில் வந்து இருக்கிறோம். அப்பாவும் எங்களை தாங்குற நிலையில் இல்லை. வட்டிக்கு மேல் வட்டி கடன் வாங்கி குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எங்களை மாதிரி கலைஞர்கள் எல்லோருமே இப்படித்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அரசு நாட்டுப்புற கலைஞர்கள் மேல் கருணை பட்டு அவர்களுக்கு என்று நிரந்தர வருமானம் வருமாறு உதவி செய்ய வேண்டும். என்னுடைய மருத்துவ செலுவுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.






