பண மோசடி, வழக்கு, சிறை… பிக்பாஸ் ஐஸ்வர்யா காதலன் என்று சொல்லப்படும் “கோபி” இப்படிப்பட்டவரா..?

0
873
Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை `ஏஞ்சல்’ என அழைத்த கோபி யார். அவரைச் சுற்றி இருக்கும் சர்ச்சைகள் இவை.தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்(?) தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்’ என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்’ என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்செஃப்ட் இது. தமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி.

-விளம்பரம்-

Bigg-boss-aishwarya

- Advertisement -

தொகுத்து வழங்கினார், கமல்ஹாசன். கிடைத்த வரவேற்பால் இந்த ஆண்டு 2-வது சீஸன் தொடங்கப்பட்டு, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீஸனில் சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. அதில், பெரும்பாலான சர்ச்சைகளுக்கு மையப்புள்ளியாக இருப்பவர், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற நால்வரில் ஒருவரான ஐஸ்வர்யா.

சக போட்டியாளரான ஷாரிக்குடன் நெருக்கம் காட்டியது, கோபப்பட்டு பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது போன்ற மற்ற விஷயங்களையெல்லாம் `ஷோ டி.ஆர்.பி.க்காக இருக்கலாம்’ எனக் கடந்து சென்றுவிடலாம். ஆனால், நடந்திருக்கும் மற்ற சில விஷயங்கள் அதிர்ச்சி ரகம்.

-விளம்பரம்-

Aishwarya

`நீங்க என்ன ஐஸ்வர்யாவுக்கு எதிரான ஆர்மியா?!’ எனக் கேட்காதீர்கள். ஆர்மி இல்லை, விஷயம் போலீஸ் சம்பந்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் தொடர்புகொள்ள விரும்புகிறவர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது ஐஸ்வர்யா கோபி என்பவருடன் பேசினார். `ஹாய் ஏஞ்சல்’ என அழைத்த கோபியிடம், `அப்பா, அம்மா, நளினி எல்லாம் நல்லா இருக்காங்களா?’ எனக் கேட்டார், ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் மோதிர விரலிலும் `கோபி’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியில் கடிதம் வாசிக்கிற ஒரு டாஸ்கிலும் `கோபி’ என்கிற இந்தப் பெயர் அடிபட்டது.

கோபி – ஐஸ்வர்யா இடைப்பட்ட உறவு என்னவாகவும் இருக்கட்டும். யாருக்கும் இதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிற, பணத்தை இழந்த பலரும் இன்றும் தேடிக்கொண்டிருக்கிற ஒருவர், லட்சக் கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிற டிவி நிகழ்ச்சியில் பேச, (அதுவும் முதன்முதலாக அரசியலில் இறங்கி தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கமல் முன்னிலையிலேயே!) முன் வந்திருக்கிறார் என்றால்… எப்படி இருக்கும்.?

ஆம். ஐஸ்வர்யா தொடர்புகொண்டு பேசிய கோபி, 2016-ல் சென்னை போலீஸால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தவர். நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை நகரக் காவல் துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், இவர் மீதான வழக்குகளை பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில், சில மாதங்களிலேயே சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார், கோபி.

Aishwarya

வழக்கு இப்போது பொருளாதாரக் குற்றப் பிரிவில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கோபியால் பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசினோம்.

“பல போலி கம்பெனிகளைத் தொடங்கி, மோசடி செய்த குரூப் அது. நிறைய இடங்கள்ல ஆபீஸ் திறந்து, நிறைய ஆள்களை வேலைக்குப் போட்டு, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தர்றேன்னு சொல்லியே பணத்தைச் சுருட்டிட்டாங்க. 10 லட்சம் கடன் வேணும்னா ஒரு லட்சம் டெபாசிட் பண்ணணும். நூற்றுக்கணக்கானோர் பணம் கட்டினோம். எல்லாம் போச்சு. எங்களுக்குக் கடனும் கிடைக்கல. நாங்க கட்டிய பணமும் திரும்ப வரல. `இன்னைக்கு வரும், நாளைக்கு வரும்’னு சொல்லிக்கிட்டே இருந்தவங்க, ஒரே ராத்திரியில ஆபீஸைக் காலி பண்ணிட்டு தலைமறைவாகிட்டாங்க. பாதிக்கப்பட்ட நாங்க, கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்தோம். பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரிக்கும்னு சொன்னாங்க. இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பு `கோபி கிருஷ்ணன்’ என்பவரைக் கைது செய்தப்போதான், எங்களுக்கெல்லாம் அவர்தான் அந்த கம்பெனி முதலாளினு தெரிய வந்தது. பலபேர் அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்ததுகூட இல்லை.

சரி, மோசடி செய்தவர்தான் கைதாகிட்டாரே… பணம் திரும்ப வந்திடும்னு நம்பினோம். ஆனா, இதுவரைக்கும் பணம் கிடைக்கலை. கிண்டியில் இருக்கிற பொருளாதாரக் குற்றப் பிரிவு ஆபீஸ்ல கேட்டா, `விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்’னு சொல்றாங்க. பணம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையே எனக்குப் போயிடுச்சு. கோபி கிருஷ்ணன் இப்போ பழையபடி வேற இடத்துல அதே மோசடி வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டேன்!” என்கிறார், அவரிடம் 1 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்த ஐ.டியில் பணிபுரிகிற அந்த நபர்.

“போலீஸ்காரங்க `படிச்சவங்கதானே நீங்க. இப்படி ஏமாந்துட்டு வந்து நிற்குறீங்களே?’னு எங்களைத்தான் கேட்குறாங்க. அப்போவே அந்த கம்பெனியில நிறைய பார்ட்னர் இருக்கிறதா பேசப்பட்டுச்சு. அதுல ஐஸ்வர்யானு ஒரு நடிகை பெயரையும் சொன்னாங்க. இப்போதான் அந்த நடிகைதான், `பிக் பாஸ்’ ஐஸ்வர்யானு தெரியவருது. இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு ஆள் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்து தைரியமா பேசுறார்னு தெரியல. ஷோ ஒளிபரப்புகிற சேனல் எப்படி இதை அனுமதிச்சதுன்னும் புரியல. போலீஸ் இப்போவாவது இறங்கி நடவடிக்கை எடுத்து எங்க பணம் எங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு பண்ணணும்!” என்கிறார், இன்னொருவர்.

அதேநேரம் கோபி கிருஷ்ணன் ஏமாற்றிய தொகையில் பகுதியளவு திரும்ப கிடைக்கப் பெற்றதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

கோபி கிருஷ்ணன் குறித்து மேலும் அறிய முற்பட்டபோது கிடைத்த தகவல்கள் தலைசுற்ற வைக்கின்றன. இவரது முழுப்பெயர் வி.வி.கோபி கிருஷ்ணன் (வாசு வெங்கடகிருஷ்ணன் கோபிகிருஷ்ணன்). `ஜெய்சாய் ராம் ஹோம்ஸ் இந்தியா’, `தீயாஸ் ஹோட்டல்ஸ்’, `ஓம் ராகவா சிட்ஸ்’ உள்ளிட்ட சில கம்பெனிகளின் இயக்குநர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இதில், `ஓம் ராகவா சிட்ஸ்’ நிறுவனத்தில் `வாசு நளினி’ என்பவரும் இன்னோர் இயக்குநர். (பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கோபியுடன் பேசியபோது, நளினி குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது).

gopi

”ஐஸ்வர்யாவுக்கு இந்த கோபியுடன் எப்படி நட்பு உண்டானதாம்?”

கோபி கிருஷ்ணன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். அப்போ அறிமுகமானவங்கதான், ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா பிக் பாஸ் ஷோவுக்குள் வந்ததிலும் கோபிக்குப் பங்கு இருக்கலாம். அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் புகழை வைத்து, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் பார்க்கத் திட்டமிட்டிருந்தா சொல்றாங்க. அதேபோல, இந்த சீஸன்ல அடம்பிடிச்சு ஷோவுக்குள் போன ஒரே ஆள், ஐஸ்வர்யாதான். முதல் சீஸன் முடிஞ்சதுல இருந்தே 2-வது சீஸன்ல கலந்துக்கணும்னு பல வழிகள்ல முயற்சி பண்ணியிருக்காங்க, ஐஸ்வர்யா. ‘தமிழ் சரியா பேசத் தெரியல’, ‘இன்னும் கொஞ்சம் பிரபலமான பிறகு சேர்த்துக்கிறோம்’ எனப் பல காரணங்களைச் சொல்லி சேனல் நிர்வாகம் இவரை முதலில் ஏற்கவில்லை. ஆனா, ஏதோ ஒரு வழியில இந்த நிகழ்ச்சிக்குள்ள வந்துட்டாங்க ஐஸ்வர்யா” என்கிறார்கள், இந்த விவகாரங்களை அறிந்த சிலர்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலக வட்டாரத்தில் பேசியபோது, “பண மோசடி வழக்கு விசாரணை என்பது பெரிய பிராஸஸ். எத்தனையோ வழக்குகளில் ஏமாத்திட்டு தலைமறைவானவங்க இன்னும் பிடிபடல. அதுக்காக, அந்த வழக்கை அப்படியே விட்டிருப்பாங்கனு யாரும் நினைக்கத் தேவையில்லை. எல்லா வழக்குகளும் முறைப்படி விசாரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.” என்கிறார்கள்.

இது தொடர்பாக கோபியிடம் விளக்கம் பெற முயன்றோம். நமது தொடர்பு எல்லைக்குள் அவர் வரவில்லை. அவரோ அவர் தரப்பினரோ விளக்கமளிக்க முன்வந்தால், பரீசிலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

Advertisement