தபேலா எடுத்து அடித்தால் நீ எல்லாம் இசை ஞானியா? என்று இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையில் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனால் இவருக்கு பல விருதுகள் கிடைத்து உள்ளது.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள் என்று இளையராஜா, மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.
மோடி குறித்து இளையராஜா கூறியது:
அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை விமர்சித்துப் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டி:
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சார பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சில தினங்களுக்கு முன் ஈரோட்டில் மேற்கொண்டார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பது, தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆக முடியாது. பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறார்கள். கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று கூறிக்கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழியில்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதும், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்துக் கொள்வது என்ன நியாயம்?
இளையராஜாவை விமர்சித்து கூறியது:
நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்? என நினைக்கிறேன். இளையராஜாவுக்கு கிட்டத்தட்ட 80 வயதாகிவிட்டது. துவக்கத்தில் தொழிலாளர் நலன் குறித்து பாடிய நீ பணமும் புகழும் வந்தவுடன் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய். அதை தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம், உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதை விடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? அம்பேத்கர் செய்த தியாகம் என்ன, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பை வகுத்துக் கொடுத்தவர். அவர் நினைத்திருந்தால் எத்தனையோ இடத்திற்கு சென்று இருக்கலாம்.
மோடி குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது:
ஆனால், அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர். அவருடன் மோடியை ஒப்பிட்டு கேடி தானம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் மோடியை பெரியாருடன் ஒப்பிட கூட தயங்க மாட்டார்கள். பெரிய தாடி வைத்திருக்கிறார், மோடியும் தாடி வைத்துள்ளார் என்று காரணம் கூறுவார்கள். ஏன் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடலாமா? முசோலினியுடன் ஒப்பிடலாமா? அதை விட்டு இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த வரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்? ஒரு காலத்தில் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர் தான் இந்த இளையராஜா. அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்ற நினைப்பு என்று இளையராஜாவை விமர்சித்து பயங்கரமாக பேசியிருக்கிறார்.