பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் ஆதி’ தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் பலர் உள்ளனர். ஜி.வி பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசையமைக்க தொடங்கினார்.
அதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு இருந்தார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை, ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங் ஸ்டார்’ என்ற பாடலின் மூலம் அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி யின் ‘ஆம்பள’ படத்தில் இசையமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஹிப் ஹாப் ஆதி திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து ஆதி அவர்கள் தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை, மிஸ்டர் லோக்கல், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்திருக்கிறார. அதற்குப் பின் இவர் ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘PT சார்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆதி வெளியிட்ட வீடியோ:
மேலும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இசையமைக்கும் ஆதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஹிப் ஹாப் ஆதியை இந்திய கிரிக்கெட் வீரர் ‘ரோஹித் சர்மா’ என நினைத்து வெளிநாட்டு ரசிகர் ஒருவர், ‘World Cupஐ வென்றதுக்கு நன்றி’ என்று கூறி புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை ரோஹித் சர்மா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகரிடம் நான் ரோஹித் சர்மா இல்லை, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி என கூறியுள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
‘டாக்டர் பட்டம்’ வாங்கியா ஆதி:
மேலும், நான் ரோஹித் சர்மாவா, எனது நண்பன் ஜீவா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நான் ரோகித் சர்மா மாதிரி இருக்கிறேன்னு நினைக்கிறீர்களா? என்று பதிவில் கேட்டுள்ளார் ஆதி. பின் ஹிப் ஹாப் ஆதி அவர்கள் கவர்னர் கையால் டாக்டர் பட்டம் வாங்கியவர். அதாவது ஆதி அவர்கள் இசைத்துறையில், பி.ஹெச்டி முடித்திருக்கிறார். இதனால் கோவை பாரதியார் அரசு பல்கலைக்கழகத்தில் ‘ஆளுநர் ஆர்.என்.ரவி’ கையால் இசைத் துறை என்ற பிரிவில் ஆதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆதி குறித்து:
அதனைத் தொடர்ந்து ஆதி, நடித்துக் கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்கள். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆதி சில வெப் தொடர்களையும் இயக்கி இசையமைத்துள்ளார். தற்போது ஹிப் ஹாப் ஆதி, நடிகர் வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ என்ற படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார் என்று தெரிகிறது.