வீதிவீதியாக வேலை தேடி அலைந்த இவர் இன்று ஆயிரம் பேருக்கு மேல் வேலை வழங்கி சாதனைப் பெண்மணியாக திகழ்ந்து வருகிறார். குப்பையில் போட்டாலும் வைரம் வைரம் தான், மண்ணில் விழுந்தாலும் முளைத்து மரமாகி நிற்பேன் என்று தன் வாழ்க்கையில் பல போராட்டங்களில் வென்று சாதித்துக் காட்டியவர் உமையாள். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவர் எம்பிஏ படித்து உள்ளார். வழக்கமாக இவருக்கும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் இவர் கோவையில் வசித்து வந்தார். ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்ற வங்கியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டு வந்தார். இப்படி இவருடைய வாழ்க்கை நன்றாக சென்றது. பின் திடீரென்று எதிர்பாராத விதமாக இவருடைய வாழ்க்கையில் சூறாவளி வீசியது.
இவருடைய கணவர் தினமும் இவரை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை கூட யோசிக்காமல் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் தன்னுடைய வங்கி வேலையையும் உமையாள் விட்டார். பின் கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனை, என்ன செய்வது என்று புரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக உமையாள் போராடினார்.பிறகு கையில் குழந்தையுடன் எந்த வருமானமில்லாமல், கணவனின் ஆதரவு இல்லாமல் கஷ்டப்பட்டார். வேலை தேடி செல்லும் இடங்கள் எல்லாம் சான்றிதழ் இல்லாமல் அவமானம் பட்டார்.
வயிற்றுப்பசி, குழந்தையின் நிலைமை என பல பிரச்சனைகளை சந்தித்து பல போராட்டங்களுக்கு பிறகு உமையாள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மாலை முதல் மறுநாள் காலை வரை ஒரு கால்செண்டரில் மிகக் குறைந்த ஊதியத்தில் 12 மணி நேர வேலையில் உமையாள் சேர்ந்தார். பின் வீட்டுக்கு வந்தாலும் ஓய்வு கிடையாது. மீண்டும் தனியார் வேலை வாய்ப்புகளை தேடி அலைந்தார். குழந்தை ஒரு பக்கம் வாழ்க்கையில் பணத்தின் சுமை ஒரு பக்கம் என்று மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் உமையாள் போராடி இருந்தார். இது ஒரு பக்கமிருக்க நீதிமன்றத்தில் இவருடைய விவாகரத்து வழக்கும் சென்று கொண்டிருந்தது. அப்போது நீதிபதியிடம் என்னுடைய சான்றிதழ்களை கொடுங்கள் என போராடி சான்றிதழ்களை வாங்கினார்.
பிறகு அதை வைத்துக்கொண்டு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். பின் ஒரு நாள் உமையாள் இனிமேல் வேலை தேடி அலைந்து யாரும் கஷ்டப்படக் கூடாது என்று ஒரு முடிவு செய்தார். அதற்குப் பிறகுதான் சொந்தமாக ஒரு கன்சல்டன்சி தொடங்கினார். அன்று முதல் இன்று வரை வேலை தேடி வரும் யாரிடமும் ஒரு பைசாக் கூட பணம் வாங்காமல் வேலை வாங்கிக் கொடுத்து வருகின்றார் உமையாள். இவர் Adwaith Ventures என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை மையத்தின் மூலம் இவர் இதுவரை 1300 நபர்களுக்கு மேல் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுவும் இவர் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறன் படைத்த பெண்கள் என்று பல பேருக்கு உதவி செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வசித்து கொண்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருவது குறித்து கூட உதவி செய்து வருகிறார்.
இதற்காக இவர் தனது பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கியுள்ளார். மேலும், உமையாள் தனது நிறுவனத்தின் மூலம் கல்வி தகுதி உடைய, கல்வித்தகுதி ஏற்ற என அனைவருக்கும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை வாங்கி தந்து இருக்கிறார். இவர் வேலை வாங்கித் தந்த நபர்களில் ஒருவர் கூட இவரைப் பற்றி குறை சொன்னது கிடையாது. அதுமட்டும் இல்லாமல் இவ்வளவு பேருக்கும் இவர் எந்த ஒரு பணமில்லாமல், லஞ்சம் இல்லாமல் தான் இதையெல்லாம் செய்தார். இதெல்லாம் இவர் செய்ததற்கு காரணம் இவரைப் போல யாரும் பணத்தால் கஷ்டப்படக்கூடாது, வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படக்கூடாது என்ற ஒரு குறிக்கோளாக தான். குறிப்பாக பெண்கள் வேலை இல்லாமல் பிறர் கையை ஏந்த கூடாது என்ற நோக்கத்திலும் இதெல்லாம் செய்தார். சில நிறுவனங்கள் இவரிடம் ஊழியர்கள் வேலைக்கு வேண்டும் என்று கேட்கும் போது இவரிடம் வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களை நேர்முகத்தேர்வுக்கு அந்த நிறுவனங்களிடம் அனுப்பி வைப்பார்.
அவர்கள் அதில் தேர்வாகி வேலைக்கு செல்வார்கள். அதிலும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தி எந்தவித பின்னணியும் இல்லாத நபர்களை தான் இவர் வேலைக்கு சேர்த்து விடுவார். இதனால் உமையாள் மீது எந்த ஒரு குறையுமே வந்ததில்லை. இதற்காக அவர் அந்த நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொள்வார். ஆனால், இதுவரை வேலை தேடி வருபவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கியது கிடையாது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இதற்காக இவர் ஒரு தனி அலுவலகம் கூட அமைக்கவில்லை. தன்னுடைய வீட்டின் மாடியையே அலுவலகம் பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தனது நிறுவனம் குறித்து எந்த ஒரு விளம்பரமும் செய்ததில்லை.
உமையாள் தன்னுடைய தொழிலை மிகச்சரியாக நேர்மையாக செய்வதனால் தான் இவரை தேடி பல பேர், பல நிறுவனங்கள் வருகின்றது. இவர் சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் நலனுக்காக பாடுபடுவதற்காக women empowerment Award, சுயசக்தி விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்று பல நூறு பெண்களுக்கு வேலை வழங்கி தரும் இவரால் வரும் காலத்தில் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். பல பெண்கள் சாதிப்பதற்கு இவர் ஒரு முன் உதாரணமாய் திகழ்ந்து வருகிறார்.