மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பாட்டல் ராதா. இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்து இருக்கிறார். எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ ராதாமணி என்ற பாட்டல் ராதா டைல்ஸ் ஓட்டும் வேலை செய்கிறார். இவர் டைல்ஸ் ஒட்டுவதில் பலே கில்லாடியாக இருக்கிறார். இருந்தாலுமே இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். இவருடைய மனைவி தான் சஞ்சனா நடராஜன். இவர் தன்னுடைய கணவனை எப்படியாவது குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு வர வேண்டும் என்று போராடுகிறார். அந்த வகையில் இவர் ராதாமணியை கட்டிட வேலை இருப்பதாக பொய் சொல்லி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்.
இந்த மறுவாழ்வு மையத்தை ஜான் விஜயன் தான் நடத்துகிறார். ஆனால், அந்த மறுவாழ்வு மையம் பார்ப்பதற்கு சிறை போல இருக்கிறது. அந்த இடத்தில் ராதாமணியால் இருக்கவே முடியவில்லை. அங்கு இருந்து தப்பித்து வந்து விடுகிறார். இதனால் அவர் மனைவி ரொம்பவே வேதனைப்படுகிறார். இனி இவரை திருத்தவே முடியாது என்று வேதனையில் அவருடைய குடும்பம் பிரிந்து போகிறது.
இறுதியில் பிரிந்து போன குடும்பத்தில் மீண்டும் ராதாமணி சேர்வாரா? தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. குடிபோதையினால் ஒருவருடைய குடும்பம் எப்படி எல்லாம் சீரழிகிறது என்பதை மையப்படுத்திய கதையை தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் ஒருவரின் குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு கையாளும் முறைகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.
இது புதிய கதை இல்லை. வழக்கமான கதை தான் இந்த படத்தில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களே யூகிக்க கூடிய அளவிற்கு படம் இருக்கிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் சுவாரசியமாகவும் திரில்லிங்காகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். படத்தில் குரு சோமசுந்தரம் நிஜமான குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காமெடியும் சில இடங்களில் நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தினுடைய நீளத்தை குறைத்து இருக்கலாம். படத்தில் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்புமே இல்லாமல் இருப்பது தான் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் பாதி ஓரளவு நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி சரியாகவே இல்லை.
அது மட்டும் இல்லாமல் சொல்ல வேண்டிய கருத்தையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மக்கள் மத்தியில் பதிய வைத்து இருக்கலாம். குடிகார கணவன்மார்களிடம் அன்பை எதிர்பார்க்கும் பெண்களின் போராட்டத்தை தான் இந்த படத்தில் சொல்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. குடியிலிருந்து வெளியேற வேண்டும் என நினைப்பவர்கள் போய் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். மற்றபடி படத்தில் பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லை.
நிறை:
குரு சோமசுந்தரம் நடிப்பு நன்றாக இருக்கிறது
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களம் ஓகே
பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே
குறை:
படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் சுவாரசியமும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருக்கலாம்
இரண்டாம் பாதி சரியில்லை
சில காட்சிகள் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
அரைத்த மாவையே தான் இயக்குனர் இந்த படத்திலும் அரைத்திருக்கிறார்
மொத்தத்தில் பாட்டல் ராதா – விறுவிறுப்பு குறைவு