இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்த இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது. பின் சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றி இருந்தார்.
இளையராஜா பாராட்டு விழா:
சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருந்தார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவிற்கு மாபெரும் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 13ஆம் தேதி தான் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேச இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வரப் போகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி திரை உலகில் இருக்கும் ஜாம்பவான்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இளையராஜா இசைக்க இருக்கிறார்.

அரசு வாய்த்த கோரிக்கை:
மேலும், தமிழக அரசே நடத்தும் நிகழ்ச்சி என்பதால் வெளிநாட்டில், வெளியூரில் நடக்கும் அனைத்து சினிமா படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு திரை உலகில் உள்ள அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள சொல்லி சினிமா சார்ந்த அமைப்புகளுக்கு அழைப்பு விடுவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரபல ஹீரோக்கள் எல்லோருமே கலந்து கொள்வதாக உறுதியும் அளித்திருக்கிறார்கள். ஆனால், இதில் அஜித் - விஜய் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு சினிமா உலகில் மட்டுமில்லாமல் தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.






