இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்றனர். படத்தில் ராஜாகண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன், அவரின் மனைவி பார்வதி கதாபாத்திரத்தில் லிஜோமோல் அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளை பெற்று இருக்கிறது. கடலூர் மாவட்டம் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜாகண்ணு. இவர் மீது திருட்டுப் பலி போட்டு போலீசார் கைது செய்து அடித்து கொன்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. இதை மையப்படுத்தி தான் ஜெய்பீம் படத்தை இயக்குனர் ஞானவேல் எடுத்திருந்தார். ராஜக்கண்ணு, பார்வதி மட்டுமில்லாமல் அவருடைய உறவினர்களையும் போலீசார் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தினார்கள். இவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக போராடி இருந்தார்.

Advertisement

பார்வதி பேட்டி:

பல போராட்டங்களுக்குப் பிறகு இவர்களுக்கு நீதியும் வாங்கி கொடுத்தார். ஆனால், ராஜக்கண்ணு குடும்பத்திற்கு 30 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி இழப்பீடு வழங்கவே இல்லை. இது தொடர்பாக ராஜ கண்ணுவின் உறவினரான கொளஞ்சியப்பன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை அடுத்து இத்தனை வருடங்கள் ஆகியும் இறுதி இழப்பீடு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ராஜ கண்ணனின் மனைவி பார்வதி கூறி இருப்பது, போலீசார் பண்ண அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவர் இன்னும் எங்களுக்கு சரியான இழப்பீடு கிடைக்கவில்லை. என்னுடைய வீட்டுக்காரரை அடித்து கொன்று விட்டார்கள். எங்கள் சொந்தக்காரர்கள் எல்லோரையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார்கள்.

நிவாரண நிதி குறித்து சொன்னது:

என் வீட்டுக்காருடைய அக்கா, மகனையும் ஒரே இடத்தில் நிர்வாணப்படுத்தி கொடுமை படுத்தினார்கள். அது எல்லாம் நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள். அடித்தே சித்திரவதை செய்திருந்தார்கள். அவர்கள் அடித்த அடியில் உடம்பு சரியில்லாமல் இருந்த என்னுடைய நாத்தனார் இறந்து விட்டார். இதுவரைக்கும் தமிழ்நாடு அரசு இடைக்கால நிவாரணமாக மொத்தமாகவே 4 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார்கள். எனக்கு ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபாய், என் நாத்தனார் குடும்பத்திற்கு 85 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. ஒரு உயிரோடு விலைமதிப்பு ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபாய் தானா? நாங்க இந்த கேசை நடத்தும் போது வாபஸ் வாங்க சொல்லி எவ்வளவோ பிரச்சனைகள் கொடுத்தார்கள். இருந்தாலும், எங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தான் துணையாக நின்றார்கள்.

Advertisement

குடும்பம் குறித்து சொன்னது:

எனக்கு மூன்று பிள்ளைகள். யாருமே படிக்கவில்லை. எல்லோருமே கூலி வேலை தான் செய்கிறார்கள். என் இரண்டு பசங்களுக்கும் எட்டு பிள்ளைகள். என் பொண்ணுக்கு இரண்டு பிள்ளைகள். மொத்தம் 10 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். ஜெய் பீம் படத்துக்கு பிறகு தான் என்னுடைய வாழ்க்கை பலருக்குமே தெரியும். அதற்கு பிறகு சூர்யா சார் 10 லட்சம் கொடுத்தார். அது வைப்பு நிதி என்பதால் மாதம் அதிலிருந்து எனக்கு 4000 முதல் 5000 வரை பணம் வருகிறது. அதை பேரப்பிள்ளைகளுக்கு கொடுத்து விடுகிறேன். லாரன்ஸ் சார் எனக்கு ஒரு லட்சம் கொடுத்தார், என்னுடைய பிள்ளைகளுக்கு மொத்தம் நாலு லட்சம் ரூபாய் கொடுத்தார்.

Advertisement

பார்வதி கோரிக்கை:

அதெல்லாம் எங்களுடைய குடும்ப செலவுக்கே செலவாகிவிட்டது. இந்த நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவவில்லை என்றால் என்னுடைய நிலைமை என்னவாக இருக்கும். இப்போ வரைக்கும் எனக்கு சொந்த வீடு கிடையாது. புளிய மரத்துக்கு அடியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தூங்கும்போது பள்ளிக்கூடத்துக்கு போய் படுத்து விடுவோம். எங்களுடைய நாத்தனார் குடும்பமும் இப்படி தான் கஷ்டப்பட்டு கொண்டு வருகிறது. அதனால் தான் என் நாத்தனார் கொழுந்தனார் மகன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். காவல்துறை அட்டூழியத்தில் அவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டதும் எங்கள் நிலைமையை பார்த்துட்டு எத்தனையோ பேர் வேணுனாலும் உதவி பண்ணலாம். ஆனால், தமிழ்நாடு அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. என் பிள்ளைகளுக்கும் பாதிக்கப்பட்டு குடும்பத்திற்கும் அரசு வேலையும், உரிய இழப்பீடு தொகையும் கொடுத்த உதவியாக இருக்கும் என்று கண்கலங்கியவாறு கூறியிருந்தார்.

Advertisement