தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பற்றி ஜேம்ஸ் வசந்தன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் ஒரு அரசியல்வாதியாக ஆக இன்னும் பல காலம் ஆகும் என்பதை அவர் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். எதைவைத்து இதைச் சொல்கிறேன்? அவர் எதைச் சொன்னாலும் இதைத்தான் நிரூபிக்கிறார். அவருக்கு எதுவுமே தெரியாது, தெரியவில்லை என்பதை நமக்கு ஆணித்தரமாகப் புரியவைக்கிறார். சொல்லிக்கொடுக்கப்படுவதைச் சிறுபிள்ளைபோலச் சொல்கிறார். இவரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஒரு நடிகனாக பலராலும் விரும்பப்பட்ட இவர், இன்று, இவருடைய கண்மூடித்தனமான ரசிகர்களைத் தவிர, பிறரால் வெறுமையாக அறியப்படுகிறார். பலரும் இவர்மேல் இரக்கப்படத்தான் செய்கிறார்கள்.
விஜய் அரசியல்:
மேடையில் பேசும்போது சில இடங்களில் திடீரென கத்துகிறார். அது சீமானைப் பார்த்துதான் என்பது எல்லாருக்கும் தெரிகிறது. கூடவே, அந்த நடிப்பு அனுபவமும் சேர்ந்துகொள்ள, வேடிக்கையாக இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குப் பிறகு, சசிகலா அவரைப்போலவே புடவையணிந்து, தலைசீவி, ஒப்பனை செய்து தோன்றியபோது நக்கலடித்தோம். ஆனால், அவருக்கு அரசியல் அறிவு இருந்ததை நம்மால் மறுக்கமுடியவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, யாரை அமைச்சராக்குவது, யாரை வைப்பது, யாரைத் தூக்குவது, எந்த சொத்தை யாரிடமிருந்துப் பிடுங்குவது, பணத்தை எங்கு வைப்பது, யாரையெல்லாம் பினாமி ஆக்குவது, அம்மாவையே ஆட்டிவைப்பது என்று முகமற்ற அரசியல்வாதியாக இருந்தார் என்பது அரசியல் வட்டாரத்தில் எல்லாரும் அறிந்ததே.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
அப்படியிருந்தும் அவரை செயல்பாட்டு அரசியலுக்குள் வரவிடக்கூடாது என மக்கள் கொதித்ததையும் நாம் கண்டோம். இந்த மண்ணில் சிந்திக்கிற ஆற்றல்மிக்கவர் அதிகம் உண்டு. அவர்கள் விஜய்யை ஒருநாளும் அரசியல்வாதியாக ஏற்கமாட்டார்கள். விஜய் ஒரு குழந்தை. இவர்மேல் கோபப்பட முடியவில்லை. இரக்கம்தான் வருகிறது. நம் கவலையெல்லாம் இவர்பின்னே ஓடுகிற அந்த இளம்தலைமுறையைக் குறித்துதான். அவனுடைய எதிர்காலத்தையும், அவன் பங்குவகிக்கப் போகிற எதிர்காலச் சமூகத்தையும் நாசமாக்கிடும் வேலைகளில் அவன் ஈடுபடுகிறான் - அறியாமை காரணமாக! இவரை நடிகனாக உயர்ந்து பார்த்த இளம் ரசிகர்களும், கவர்ச்சியால் மட்டுமே கவரப்பட்ட மூடப்பெண்களும் இவர் என்ன செய்தாலும் ஆதரிக்கிற இடத்தில் இருப்பது இந்த நாட்டுக்கே கேடு.

விஜய் விமர்சனம்:
என் தலைமுறைக்குப் பெரிய பிரச்சனையில்லை. இந்தத் தலைமுறைக்கும், வருந்தலைமுறைக்கும் இது மிகப்பெரிய இடர். விஜய் வென்றுவிடுவார்; ஆட்சியமைப்பார்; ஒன்றும் தெரியாமல் இந்த நாட்டை நாசமாக்குவார் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இவர்தான், சிறுபிள்ளையின் கனவுலகம் போன்று ஆசைப்படுகிறார் என்றால் நமக்குத் தெரியாதா? இப்படிப் பேதலித்துப் போய் திரிகிற எதுவுமறியாத இளைஞர் பட்டாளத்துக்கும், அந்த இனக்கவர்ச்சிப் பெண்களுக்கும் நாம் எப்படி வாழ்க்கையின் அடிப்படையை விளங்கவைக்கப் போகிறோம் என்கிற கவலைதான் நமது! பல்வேறு துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கிற-சாதிக்கத்துடிக்கிற, பல்வேறு வாழ்க்கை நிலைகளிலுள்ள பெண்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம், வாசிக்கிறோம், கேள்விப்படுகிறோம். அவர்களுக்கு நடுவில் இப்படியொரு பேதைக்கூட்டம் இருப்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது; வேதனையாகவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.






