தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்திருக்கும் சரிதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரபல நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் தான் தனது கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று அறிவித்திருந்தார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் அவர்கள் போட்டியிட இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற்றது.
மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோட இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து இருந்ததை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். பின், மாநாட்டில் விஜய் தன் கட்சியின் கொள்கைகளை குறித்து பேசி இருந்தார். அதோட தனது ஸ்டைலில் பாண்டிய மன்னனின் குட்டி ஸ்டோரி குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் பேசி வருகின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
அந்த வகையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், அரசியல் பின்புலமே இல்லாமல், அதில் ஒரு ஈடுபாடு இருக்கிறதென்பதை சூசகமாகக் கூட மக்களுக்குச் சொல்லாமல், சடாரென குதித்த விஜய்தான் அண்மைக்காலத் தமிழக அரசியல் விவாதப் பொருள். இவர் ஏன் வரவேண்டும்? இங்கில்லாத எதை இவர் வந்து தரப்போகிறார்? என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவார்? இவைதான் வாக்களார்கள் மனதிலுள்ள கேள்விகள். விடைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான்:
இதனால் அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. இதை விஜய்யும் அறிவார். இருந்தும் ஒரு தவற்றை இவ்வளவு தொடக்கத்திலேயே செய்தது மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. அன்புமணி ராமதாஸ் இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி. சில சூழல்களில் அரசியல் பார்வையின் வழியாக சில திரைப்படங்களைக் கூட எதிர்த்தவர்கள் அவர்கள். திரைப்பட நாயகர்களையும் விமர்சித்தவர்கள். விஜய்க்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை:
இருந்தும், அண்மையில், அவரைத் தொலைபேசியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். நல்ல விஷயந்தான். இது அரசியல் பண்பு. நேற்று சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். ஆனால், இரு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்குச் சொல்லவே இல்லை. குறிப்பிடும்படியான அவருடைய 70-வது பிறந்த நாள் வேறு! கமல் உங்கள் துறையின் மூத்த கலைஞர். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் நடிகர்.
அது அப்பட்டமான தவறு:
புதுமைகளுக்கு முன்னோடி. பல்கலை வித்தகர். இந்தியத் திரைப்படத்துறையின் உயர்ந்த கலைஞரில் ஒருவர். எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுகிறவர். இவையனைத்தையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சித்தலைவர். அப்பட்டமான ஒரு தவற்றைச் செய்துவிட்டீர்கள், விஜய்!. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அதை ரசிகர்களும், வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்கப் போவதில்லை. என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சித்தும், விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தது பெரும் பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.