'நீதிபதியை பாஸ் என்று அழைக்கக் கூடாது' என்று நடிகர் விஷாலை நீதிபதி எச்சரித்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் விஷாலின் ரூபாய் 21.29 கோடிக் கடனை அடைத்தது லைகா பட தயாரிப்பு நிறுவனம். இந்தத் தொகையை திருப்பி செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி, நடிகர் விஷால் படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறினார்.

இதனால் சென்னை ஹைகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதற்காக நடிகர் விஷால் நேரில் ஆஜராகி பதிலளித்தார். அப்போது, இந்த ஒப்பந்தம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்' என்று விஷால் கூறினார். அப்போது நீதிபதி, 'நீங்க போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும். மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நீங்க நினைக்கிறீங்களா'.
நீதிபதி எச்சரிக்கை:
இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் கிடையாது. கேட்கிற கேள்விக்கு கவனமாக பதில் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஷாலை எச்சரித்தார். பின் நீதிபதி கேட்ட கேள்விக்கு, பாஸ் என விஷால் சொல்லி உள்ளார். இந்த மாதிரி பாஸ் என்றெல்லாம் இங்கு சொல்ல கூடாது. கேட்கிற கேள்விக்கு மட்டும் ஆம், இல்லை என்று சரியான பதிலை சொன்னால் போதும் என்று கண்டிப்புடன் அறிவுரை கூறினார்.

இன்று விசாரணை :
இதனிடையே இந்த வழக்கின் குறுக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்த நீதிபதி, மேலும் இன்று நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது.
நடிகர் விஷால் குறித்து :
மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது 12 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றும் வெளியிட்டு இருந்தது. அதில் இனி விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை கேட்ட பிறகு தான் பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

பல சர்ச்சைகள்:
அதற்கு நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நலிந்த உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை செய்திருக்கிறேன். இதை நான் சங்கத்தின் வைப்பு நிதியை வைத்து தான் செய்தேன். இதற்கு நான் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி சங்க நிர்வாகிகள் உட்பட அனைவரையும் கையெழுத்துத்திட்ட பிறகுதான் அந்த வைப்புத் தொகையை நல திட்டங்களுக்காக செலவிட்டேன். என்னை தவறாக சித்தரிக்கும் தயாரிப்பாளர் நிர்வாகத்தினர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்று பதிலளித்திருந்தார். இது போல் பல சர்ச்சைகளில் தற்போது விஷால் சிக்கியுள்ளார்.






