களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

0
2500
- Advertisement -

Chennai: வாழ்க்கையின் ஓட்டத்தில் முன்னாள் காதலர்களைச் சந்திப்பதென்பது, அவ்வளவு எளிதாய்க் கடந்துவிடக்கூடிய விசயமில்லை என்ற ‘அழகி’யலை மற்றொருமுறை உணர்வுபூர்வமாக ‘களவாடிய பொழுதுகளி’ன் வழியே சொல்லியிருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான்.

-விளம்பரம்-

kalavaadiya

- Advertisement -

விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் சௌந்தரராஜனைக் (பிரகாஷ்ராஜ்) காப்பாற்றி, தன் கையிலிருக்கும் பணத்தை வைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார் கார் டிரைவர் பொற்செழியன் (பிரபுதேவா). பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயந்தி(பூமிகா)தான், பொற்செழியனின் முன்னாள் காதலி. பழைய நினைவுகள் மீண்டும் துளிர்க்க, பூமிகாவையும் பிரகாஷ்ராஜையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார் பிரபுதேவா.

அவர் எவ்வளவு விலகிச் சென்றாலும், பூமிகா அவருக்கு வலிய வந்து உதவ விரும்புகிறார். ஒருகட்டத்தில் பூமிகாவின் உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை பிரபுதேவாவுக்கு. அதற்குப்பிறகு பிரச்னைகள் வேறொரு வடிவமெடுக்கின்றன. இரண்டு முன்னாள் காதலர்களும் ஒரே இடத்தில் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இருக்க முடிந்ததா, இருவரின் குடும்பத்தின் மனநிலை என்ன என்பதை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.

-விளம்பரம்-

பல ஆண்டுகளுக்குப் பிறகு படம் வெளியானாலும், நம்மைக் காட்சிகளின் வழியே கட்டிப்போட்ட வகையிலும், பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டவகையிலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள்! பொற்செழியன் என்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் பிரபுதேவா. பொற்செழியன் – ஜெயந்தி இருவரது வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்; இந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அவரது நேர்மை, போன்றவை காட்சி வாயிலாக அலசப்படுகிறது. அந்த இடத்தில் இருப்பது, அவருக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல என நினைத்துப் பதபதைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பிரபுதேவாவின் நடிப்பு படத்தின் போஸ்டர்களில் இருப்பதுபோல் ,’உன்னத நடிப்பு’தான்.

kalavaadiya

பிரபுதேவாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் சவால்விட்டு நடித்திருக்கிறார் பூமிகா. இரண்டு முன்னாள் காதலர்களின் மன அவஸ்தைகளைச் சொல்லமுடியாத உணர்வுகளைத் தங்கள் சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இருவரது முன்னாள் காதலைப் பற்றித் தெரியவந்ததும், பிரகாஷ்ராஜ் தரும் முகபாவனைகளும், எடுக்கும் முடிவும் அற்புதம்.

கதையை மையப்படுத்தி நடிகர்களிடம் மிகச்சிறப்பான நடிப்பைப் பெறுவதில் மற்றுமொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார், தங்கர் பச்சான். பொற்செழியனின் மனைவியாக வரும் ராணியின் (இன்பநிலா) நடிப்பில் அவ்வளவு வெகுளித்தனம் கலந்த யதார்த்தம். மேடை நாடகம் போன்ற செட்டப்பில், ரியாலிட்டி ஷோக்கள் தலையிலும் ஒரு கொட்டு வைத்திருக்கிறார் தங்கர் பச்சான். அதற்கடுத்து வரும் பெரியார், தோழர் ஜீவா காட்சிகள் நல்லதொரு தொடக்கம். அதேபோல், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் வரும் காட்சி குழந்தைகளுக்கானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், இடைத்தேர்தல் வசனங்களும், டாஸ்மாக் காட்சிகளும் (படத்தில் ஒயின்ஷாப்) இன்றளவுக்கும் பொருந்தி வருவதுதான் தமிழகத்தின் சாபக்கேடான சூழல். காதல் காட்சிகள்தாம் ஏனோ 80-களில் வெளிவந்த சினிமா போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.

kalavaadiya

தங்கர் பச்சான் படங்களில் பேசப்படும் அரசியல் இதிலும் தொடர்கிறது. ஒரு படத்திற்குள் இயக்குநரின் அனைத்து அரசியல் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டு வந்துவிடவேண்டும் என்று ஏன் இவ்வளவு பிரயத்தனங்கள் இயக்குநரே?. இந்தப் படத்தில் அத்தகைய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவது ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகிறது. ‘ஹோட்டல்ல தமிழ் பாடல் போட்டிருக்கீங்க; தமிழ்ல கோயில் அர்ச்சனை நடக்குதா; தமிழர்களுக்குப் பெங்களூருல எதுவும் பிரச்னையில்லையே’ எனப் பிரகாஷ்ராஜ் ஒருபுறம், ‘மூளை வேலை செய்பவனுக்கு அதிகச் சம்பளம், உடல் வேலை செய்பவனுக்குக் கம்மி சம்பளமா’ என பெரியாரிஸத்தையும், கம்யூனிஸத்தையும் உச்சஸ்தாயியில் முழங்கிவிட்டு அடுத்தநாளே முதலாளித்துவத்துக்குத் தாவுகிறார் பிரபுதேவா.

மளிகைக்கடைக்கார அண்ணாச்சியிலிருந்து பக்கத்து வீட்டுப்பெண்கள் வரை இயல்பான வசனங்கள் பேசி பளிச்சிடும் ராணி கதாபாத்திரம்கூட ஒரு காட்சியில், ‘பிரபாகரன் என்னும் பெயர் யாருக்குத்தான் பிடிக்காது?’ என்கிறார். அவ்வளவு ஏன், படத்தில் வரும் காதல் பாடலில் கூட குறுந்தொகை, திருக்குறள்தான். தங்கர் பச்சானின் தமிழ் உணர்வைப் பாராட்டும் அதேநேரத்தில், அவை பாத்திரங்களின் இயல்புக்கு மாறாகத் துருத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிரகாஷ்ராஜின் தொழிலதிபர் பாத்திரத்தை அதற்கேயுரிய பின்னணியோடும் இயல்போடும் சித்திரித்திருக்கலாம்.

கார்த்திக் குரலில் வரும் ‘அழகழகே..’ பாடல் பரத்வாஜின் பழைய மெலடிகளை நினைவூட்டுகிறது. மறைந்த பாடகர் திருவுடையான் குரலில் வரும் ‘ஆளுக்கொரு விடுகதையா…’ பாடல் வாழ்க்கையின் புதிர்தன்மை குறித்த பயத்தை விதைக்கிறது. ‘சேரன் எங்கே, சோழன் எங்கே?’ பாடல் தமிழுணர்வு, பகுத்தறிவு, சமதர்மம் என்று பல அரசியல் விஷயங்களைப் பாடுகிறது.

Advertisement