தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு. பழனியப்பன். இவர் நடிகராகவும் இயக்குனராகவும் உள்ளார். தற்போது இவர் கள்ளன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்கள். காரணம், இந்த படத்திற்கு கள்ளன் என பெயர் சூட்டப்பட்டது தான் . ‘கள்ளன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கொள்ளைக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் விதமாகவும் அந்த சமூக மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
பின் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இன்று படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், படம் வெளியாக இருக்கும் திரையரங்குக்கு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தினர் படத்தை திரையிட்டால் திரையரங்குகளை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று காலையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கள்ளன் படத்தை திரையிட அந்த தியேட்டர் நிர்வாகத்தினர் நிறுத்திவிட்டார்கள். இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் சந்திரா தங்கராஜ் இருவரும் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் மதியழகன் அளித்த பேட்டி:
இதில் தயாரிப்பாளர் மதியழகன் கூறியிருப்பது, அவ்வளவு சிரமப்பட்டு கிட்டத்தட்ட இன்று அதிகாலை வரையிலும் விழித்திருந்து கஷ்டப்பட்டுப் பேசிப் பேசி தான் இந்த படத்தை இன்று ரிலீஸ் செய்தேன். ஆனால், திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களில் எங்களது கள்ளன் படத்தை திரையிட்ட சில திரையரங்குகளில் திரைகளை சில ஜாதி வெறி பிடித்தவர்கள் கிழித்து எறிந்து இருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ஸில் வைத்து அதை பிறருக்கும் பரப்பி வருகிறார்கள். அதில், நாங்கள் எத்தனை திரையரங்குகளில் படத்தை நிறுத்தி விட்டோம் என்பதை பாருங்கள் என்று பெருமையாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.
கள்ளன் படம் திரையிடும் திரையரங்குகள்:
மேலும், அந்த ஜாதியை சேர்ந்த சில கவுன்சிலர்கள் படத்தை பார்த்த பிறகும் சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்கள் திரையரங்கில் மிரட்டல் விடுத்து படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் 150 திரையரங்கங்கள் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், தற்போது 75 திரைகளில் தான் இந்த படம் ஓடுகிறது. மேலும், சில திரையரங்குகள் எங்கள் படத்தை திரையிட மறுக்கின்றனர். நாங்கள் அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் கேட்டபடி மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனாலும், அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்க வில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விஷயத்தில் எங்களுக்காக குரல் கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஜாதியினரை பகைத்துக் கொள்ள தயாராக இல்லையாம்.
இயக்குனர் சந்திரா அளித்த பேட்டி:
நேற்று இரவு 11 மணி வரை அவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இரவு 2 மணிக்கு தான் மிரட்டல் விடுத்து பிரச்சனை செய்தார்கள். இதற்கு முன்னதாக சட்டரீதியாக இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் சந்தித்து நாங்கள் அவர்களை ஜெயித்தோம். ஆனாலும், மீண்டும் பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பேசாமல் ஓடிடி போன்ற தளங்களுக்கு இனிமேல் படங்களை கொடுத்து விடலாம் என்று நினைக்க தோன்றுகிறது என்று மனவருத்தத்துடன் பேசியிருந்தார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் சந்திரா கூறியிருப்பது, நானும் அதே ஜாதியை சேர்ந்தவள் தான். திருடன் என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் தான் கள்ளன். இது ஒன்றும் ஜாதி பெயர் இல்லை. மலைக் கள்ளன், கள்ளன், பவித்ர கள்ளன் என்று மலையாளத்தில் கூட பல படங்கள் வந்துள்ளன.
படத்தின் டைட்டில் குறித்த பிரச்சனை:
அது வெறும் டைட்டில் மட்டும் தான். கள்வர் என ஏற்கனவே பெயர் இருந்ததால் தான் நான் கள்ளன் என பெயர் வைத்தேன். இது பெரிய நடிகரின் படம் இல்லை. நான் படத்தின் பெயரை மாற்றினால் மக்களுக்கு அது உடனே போய் சேராது. ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் கள்வர் ஜாதியை சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கு மிரட்டல் விடுகிறார்கள். என்னுடைய புகைப்படத்தை எடிட்டிங் செய்து ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். முக்கியமாக வாண்டையார் என்னும் நபர் தான் என்னுடைய தொலைபேசி எண்ணை கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டார்கள். பின் நான் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 18 வருடங்களாக நான் உழைத்த உழைப்பு எல்லாம் வீணாய் போய் விட்டது.
தமிழக முதலமைச்சருக்கு வைத்த வேண்டுகோள்:
எனது சொந்த ஊரில் கூட இந்த படம் திரையிடப்படவில்லை. எனது ஊரில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் படங்கள் வெளியாகவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த செயலுக்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுதும் மீண்டும் ஜாதி வெறி பிடித்த மாநிலமாக மாறும். இது பெரியாரின் மண். பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த படத்திற்கு மட்டும் இல்லை இனிமேல் வரும் எந்த படத்திற்கும் ஜாதி பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். கரு பழனியப்பன் சேர்த்துதான் சொல்கிறேன். இந்த பிரச்சனையில் பத்திரிகையாளர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.