ரெண்டு குழந்தைகள்… ஒரு படத்துல சேர்ந்து நடிக்கும் போது நட்பா ஆகுறாங்க…. ஒரு குழந்தை நல்ல பெரிய குடும்பத்து குழந்தை. மற்றது சாதாரணக்குடும்பத்திலிருந்து வந்த குழந்தை. ஆனாலும் கள்ளங்கபடமில்லாத அந்த பிஞ்சு மனசால ரெண்டு பேரும் நட்பாகுறாங்க. ரெண்டு பேருமே சூட்டிகையா பேசுற குழந்தைகள். அந்தப்படம் ரிலீசாகி பெரிய வெற்றி. அதுக்கப்புறம் இந்த ரெண்டு குழந்தைகளுமே பல படங்களில் நடிக்கிறாங்க. நல்ல பெயரும் வாங்கறாங்க.

வருடங்கள் பல ஓடிடுது. இப்போ அந்த பெரிய வீட்டுக்குழந்தை சினிமால அடிபட்டு, மிதிபட்டு கொஞ்சம் கொஞ்சமா மேலே வந்துடறாரு. அந்த சாதாரணக்குழந்தையும் அதே சினிமால தான் இருக்கிறாரு. ஆனா அவர் சின்ன சின்ன ரோல்களில்காமெடியனா நடிக்கிறாரு. அப்பவும் ரெண்டு பேருமே நட்பா இருக்க “என்னப்பா எப்படி இருக்கே…?” …”நல்லா கீறன்ப்பா”ன்னு நட்பு மேலும் வளர்ந்துட்டே இருக்கு.

Advertisement

இந்த ரெண்டு குழந்தைகளில் அந்த ஹீரோ குழந்தைக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா மத்தக்குழந்தை பயங்கர பக்தி. முயற்சிகளில் ஹீரோ குழந்தைக்கு சளைச்சதில்லை இந்த குழந்தை. அதாவது சாதாரண வாலிபன். இதே சினிமாவில் நானும் பேரெடுக்கிறேன்னு பல இயக்குனர்களிடம் வேலை செய்து கடைசியா ஒரு படத்தை தானே தயாரிச்சு இயக்க முடிவெடுக்கிறாரு. அப்போ அய்யப்பனோட சீசன்.

திரும்புற பக்கமெல்லாம் தமிழ்நாடே அய்யப்பனை தேடி ‘சரணம் அய்யப்பா’ன்னு கோஷம் போடறாங்க. அதையே படமா எடுக்கலாம்னு ஒரு கதை ரெடி பண்ணி தொடங்குறாரு. படத்துல சண்டை காட்சி வேணும்னு ஜெய்சங்கரை கேட்டதும் அவர் நடிச்சுக்கொடுக்கிறாரு. அழகழகான பாடல்கள். அப்போதைய ஹாட் ஜோடி சரத்பாபு-ரமாப்ரபா ஒரு பாட்டுக்கு நடிக்கிறாங்க. மனோரமா மகன் நடிச்சுக்கொடுக்கிறாரு. எம்.ஆர்.ராதா மகன் நடிச்சுக்கொடுக்கிறாரு.

Advertisement

இந்த செய்தியை தன் ஹீரோ நண்பன் கிட்ட சொல்லி நீயும் ஒரு ரோல் நடிச்சுக்கொடுன்னு கேட்கிறாரு இயக்குனர் நண்பன். ஆனா அவருக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே. “சரி. உனக்காக ஒரு பாட்டு வேணா பாடுறேன்”னு ஹீரோ நண்பர் சொல்றாரு. ஆனா டைரக்டர் நண்பர் ரெக்கார்டெல்லாம் இறங்கிடுச்சின்னு சொல்றாரு. “பரவாயில்ல..இன்னொரு பாட்டு சேர்க்கலாம்”னு சொல்லி ஹீரோவும் பாட படத்தில் வேறொரு நாயகன் பாடி நடிக்கிறாரு. அப்படியும் நண்பன் முகத்தில் வாட்டம் வேண்டாம்னு ஒரு காமெடி காட்சி ஷூட்டிங்ல தன் முகத்தையும் காட்டுறாரு ஹீரோ. நண்பனுக்காக.

Advertisement
சரணம் ஐயப்பா படத்தில் கமல்

படம் நல்லபடி முடிஞ்சா சபரிமலை வருவதா வேண்டிக்கிறாரு. ஆச்சர்யம். மூணே மாசத்துல படம் முடியுது. ஒரு வினியோகஸ்தருக்கும் படத்தை போட்டுக்காட்டாமலேயே படம் வித்துடுது. படம் வெளியாகி பயங்கர ஹிட். யேசுதாஸின் அந்த பாட்டு எல்லா அய்யப்பன் ஸீஸனுக்கும் ஒலிக்காத இடமே இல்லை. அய்யப்பன் தந்த வெற்றி இதுன்னு அந்த டைரக்டர் வேண்டிக்கிட்டது போல மாலை போட்டுக்கிட்டு சென்னையிலிருந்து 520 மைல் தூரமுள்ள சபரிமலையை நோக்கி நடக்கிறாரு. ஆமாம் ….சென்னையிலிருந்து திண்டிவனம், திருச்சி, திண்டுக்கல் வழியா அவரும் அவரோட வேறு நண்பர்களும் நடக்க வழியெல்லாம் தெரிஞ்சவங்க வரவேற்று மாலை போடுறாங்க.

நடந்து நடந்து டீக்கடையை பார்த்தா நின்னு, நின்னு டீ குடிச்சி அவங்க நடையை தொடர்ந்தாங்க. 32 நாட்கள் கழித்து 520 மைல் கடந்து அவங்க சபரிமலைக்கு போய் அய்யப்பனை தரிச்சிச்சாங்க. அந்த இயக்குனரின் அபார பக்தி அவரை வெற்றி பெற வைத்தது. அதுக்கப்புறம் அதே மாதிரி இன்னும் இரண்டு பக்தி படங்கள் எடுத்தார் அவர். ஆனா குடிப்பழக்கம் தொடங்க குடும்பஸ்தனாகவும் ஆகிவிட்ட அவர் படங்களில் சிறிய ரோல்களில் நடிக்கத்தொடங்கினார். பல படங்களில் டயலாகே இல்லாத பாத்திரம்.

இப்போ அந்த ஹீரோ நண்பன் பெரிய நடிகராகிடுறாரு. எல்லா மொழிகளிலும் நடிக்கிற பெரிய நடிகர். அவரே ஒரு படத்தை தான் நடிக்காமல் தயாரிக்கிறார். அதில் சத்யராஜ் தான் நடித்தார். தன் அஞ்சு வயசு சிநேகிதனை மறக்காம கூப்பிட்டு ஒரு ரோலும் கொடுத்தாரு அந்த ஹீரோ. “எத்தனையோ திறமைகள் இருந்தும் அவன் ரோடில் நடந்து போகிறான். நான் காரில் போகிறேன்…”னு தன் நண்பனை நினைத்து ஒரு பேட்டியில் சொன்னார் அந்த ஹீரோ….சில வருடங்களில் அந்த டைரக்டர் நண்பர் மறைந்தும் போகிறார். அது தான் காலம் செய்த அறுவடை…

அந்த ஹீரோ கமல்….அந்த நண்பன் இயக்குனர் தசரதன். அவர் இயக்கிய படம் ‘சரணம் அய்யப்பா..’. அவங்க நடிச்ச படம் ‘களத்தூர் கண்ணம்மா…’ எல்லா நியதிகளும் இறைவனால் வகுக்கப்பட்டவை. கடவுளை நம்பு. நம்பாதிரு. உன் ஏதாவது ஒரு நம்பிக்கை உனக்கு கிடைக்கப்போவதை கிடைக்கச்செய்யும்… இருவர்…..

Advertisement