தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்துடைய 173 வது படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார் என்றும் கமலஹாசன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது. ரஜினியின் சூப்பர் ஹிட் ஆன அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி- ரஜினி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்தது. ஆனால், ரஜினியின் 'தலைவர் 173 'படத்தில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார். இதைத்தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அவருமே அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
தலைவர் 173 படம்:
தற்போது ரஜினியின் படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார். தற்போது இது தொடர்பான பூஜை நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிம்ரன், ராசி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய டைட்டில் வெளியீட்டு விழா ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது.

கமலஹாசன் பேசியது:
இந்த விழாவில் பேசிய கமலஹாசன், இந்த படத்தை தயாரிக்கும் அளவிற்கு என்னை மார்க்கெட்டில் வைத்ததற்கு ரொம்பவே நன்றி. ரஜினி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்கள் தான் நடித்தார். இரண்டு படங்களில் இருவரும் ஒரே நிலைமைக்கு வந்து விட்டோம். ஒருமுறைரஜினி, நீங்கள் தயாரிக்க நான் நடிக்கணும் என்று சொன்னார். அதைப் பற்றியே பேசியும் வந்தோம். 40 வருடம் முடிந்துவிட்டது. ராஜ்கமல் ஆபிஸை திறந்து வைப்பதற்கு ரஜினிகாந்த் வந்தார். அப்போதும் நாங்கள் இருவரும் சேர்ந்து படம் செய்வதை பற்றி ரஜினியிடம் கேட்டேன். இப்போது இரண்டு படங்களை நாங்கள் செய்கிறோம்.

ரஜினி பற்றி சொன்னது:
ஏவிஎம் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து வளர்ந்தவர்கள். இன்றைக்கு இங்கு வந்திருக்கிறோம். இது யாருடைய கருணை என்பது எங்களுக்கு தெரியாது. நான் கமல் படம் செய்கிறேன் என்று ரஜினி தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளராக என்னுடைய பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், வேலைகளை ரஜினியும் மகேந்திரன் தான் செய்திருக்கிறார்கள். சந்திரகாசனுடைய இரங்கல் கூட்டத்திற்கு வந்த போது ரஜினி, இனி கமல் என்ன செய்யப் போகிறார் என்று கவலைப்பட்டார். அப்போது எனக்கு இன்னொரு சகோதரர் கிடைத்துவிட்டார் என்று தோன்றியது. எல்லா பலத்தையும் இப்போது அஸ்வத் மாரிமுத்துவிடம் கொடுத்திருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது அவருக்கும் தெரியும் என்று பகிர்ந்து இருக்கிறார்






