கடந்த சில தினங்களாக கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கன்னட சீரியல் நடிகையான அனிகா என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்,போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த போதை பொருள் பயன்படுத்தும் விவகாரத்தில் கன்னட நடிகையான ராகினி திவேதி இடமும் விசாரணை நடத்த முடிவெடுத்து விசாரணைக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே நடிகை ராகினி திவேதி சார்பில் அவரது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ராகினி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ராகினி திவேதி வேறுயாருமில்லை ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான். கன்னட நடிகையான இவர் 2016ஆம் ஆண்டு காவிரி பிரச்சனையின் போது கன்னட மக்களுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘காவிரி நம்முடையது, நமக்கே குடிக்க குடிநீர் இல்லை. இந்த நிலையில் அவர்களுக்கு எதற்காக நீர் தர வேண்டும். நம் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் வருகிறேன்,நீங்களும் வாருங்கள்’ என்று ஆவேசமாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.