கன்னட திரையுலகில் இளம் பாடகியாக திகழ்ந்தவர் சுஷ்மிதா. இளம் பெண்மணி பாடகி சுஷ்மிதா அவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர். இவர் ஹாலி துப்பா, ஸ்ரீ சைதன்யா உள்பட பல கன்னட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள கார் ஷோரூமில் மேனேஜராக பணியாற்றி வந்த சரத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள குமாரசாமி லேவுட் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடன் வீட்டில் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்து உள்ளார்கள். பின் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே சின்ன சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் பிரச்சினை பெரியதாக மாறியுள்ளது. அதனால் சுஷ்மிதா கோபித்துக் கொண்டு பெங்களூர் நாகர்பாவி பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அம்மா மீனாட்சி மற்றும் தம்பி சச்சினுடன் சாப்பிட்டு விட்டு இரவு தூங்க போன சுஷ்மிதா காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தான் மீட்கப்பட்டார். மேலும், சுஷ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் தாய் மற்றும் தம்பிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில் சுஷ்மிதா கூறியிருப்பது, தன் கணவரின் பெரியம்மா, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள்.
வீட்டை விட்டு வெளியே செல்லும்படி அடிக்கடி துன்புறுத்துகிறார்கள். கணவர், கணவரின் பெரியம்மா, அவரின் சகோதரி கீதா ஆகியோர் தான் என் மரணத்திற்கு காரணம். நான் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மனம் இரங்கவில்லை. அம்மா என்னை மன்னித்து விடு. என் மாமியாரின் பேச்சைக் கேட்டு என் கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். மன ரீதியாக கடும் துன்பத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். அவர்களை சும்மா விடாதீர்கள் அம்மா. அவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை என்றால் என் ஆத்மா சாந்தி அடையாது என்று கூறியுள்ளார்.
இந்த மெசேஜை பார்த்து சுஷ்மிதாவின் தாய் மற்றும் தம்பி அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி போலீசில் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். பின் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் தலைமறைவான சரத் மற்றும் அவரது பெரியம்மா மற்றும் சகோதரி கீதாவை தேடி வருகின்றனர். இளம் பாடகி சுஷ்மிதா உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.