ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பலருமே புகார் கொடுத்திருந்தார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் நடிகர் திலீப்குமார் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது.
ஹேமா கமிட்டி :
பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்பூ பதிவு:
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகையும், அரசியல்வாதியும் ஆன குஷ்பு சுந்தர், சினிமா உலகில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தை முறியடிக்க ஹேமா கமிட்டி ரொம்பவே தேவைப்பட்டது. ஆனால், இது சினிமாத் துறையில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு எதிராக நிறைய பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றது. அதோடு சில ஆண்களுக்குமே இந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். என்னுடைய மகள்களுடன் இதை பற்றி ரொம்ப நேரம் பேசியபோது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இதை இன்று, நாளையோ பேசினால் பரவாயில்லை. ஆனால், சீக்கிரமாக பேசுவது விசாரிக்க உதவும்.
பெண்கள் நிலைமை குறித்து சொன்னது:
வெளியே சொன்னால் அவமானம் என்று நினைப்பது, பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம் சாட்டுவது, நீங்கள் ஏன் அதை செய்தீர்கள்? என்று பல கேள்விகளால் பாதிக்கப்பட்ட பெண்களுடைய நிலைமை மேலும் மேலும் மோசமாக்கும். பாதிக்கப்பட்டவர்கள் நம்முடைய ஆதரவு தேவை. ஏன் இதற்கு முன்பே வெளியே சொல்லவில்லை? என்று கேட்கும் போது அவர்களுடைய சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு பேச வேண்டும். இந்த மாதிரியான வன்முறையால் ஏகப்பட்ட காயங்கள் சதையில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஆழமாக வெட்டப்படுகிறது. ஒவ்வொரு தாய்க்கும் பின்னால் வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு விருப்பம் இருக்கிறது.
தன் தந்தை குறித்து சொன்னது:
அந்த புனிதம் சிதைந்தால் அது நம் அனைவரையுமே பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் நிலையை காது கொடுத்து கேட்க வேண்டும். ஒரு பெண்ணாகவும், தாயாகவும் இருப்பதற்கு இது போன்ற பாலியல் வன்முறையை உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா ஆண்களுமே பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்க வேண்டும். என்னிடம், உங்கள் தந்தையின் அத்துமீறல் பற்றி எல்லாம் பேசுவதற்கு இவ்வளவு வருடம் எடுத்ததா? என்று கேட்கிறார்கள். நான் முன்பே பேசி இருக்க வேண்டும். இதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், என்னுடைய கேரியரில் முன்னேறுவதற்காக நான் அமைதியாக இருக்கவில்லை. பல பெண்களுக்கு குடும்பத்தின் உடைய ஆதரவு இல்லை. பெண்கள் சிறிய ஊர்களில் இருந்து பல கனவுகளுடன் வருகிறார்கள். அவர்களுடைய கனவு சிதைக்கப்படுகிறது. பெண்கள் தைரியமாக பேச வேண்டும். No என்றால் No தான். பெண்கள் எப்போதும் தங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை சமரசம் செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுடன் ஒரு தாயாகவும், பெண்ணாகவும் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.