அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆரோமலே. இந்த படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் தன்னுடைய பள்ளி பருவத்திலேயே ஹீரோ கிஷன் தாஸ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்துவிட்டு காதல் என்றால் சினிமாவில் வருவது போல தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய காதலை தேடி அலைகிறார். பள்ளி, கல்லூரி என்று தொடர்ந்து ஒவ்வொரு பெண்ணாக அவர் காதலித்து வருகிறார். ஆனால், அந்த காதல்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை. உண்மையில் அது காதலாகவே இல்லை.
அதோடு அந்த காதலை அவரால் உணர்வுமே முடியவில்லை. இன்னொரு பக்கம் காதல் என்பதே இல்லை
என்று கதாநாயகி ஷிவாத்மிகா இருக்கிறார். இவர் மேட்ரிமனியில் சீனியர் மேனேஜராக இருக்கிறார். அந்த கம்பெனியில் புதிதாக வேலைக்கு ஹீரோ கிஷன் தாஸ் சேர்கிறார். ஹீரோயின் ஷிவாத்மிகாவை பார்த்தவுடனே கிஷன் காதலிக்க தொடங்கினார். அதற்கு பிறகு ஹீரோயினி குணத்தை அறிந்து ஹீரோ ஷாக் ஆகிறார்.

இப்படி இருவருமே இரு துருவங்களாக இருக்கும்போது இவர்களுக்கு இடையில் காதல் எப்படி மலர்ந்தது? இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. அறிமுக இயக்குனர் சாரங் தியாகு வித்தியாசமான காதல் கதையை காட்ட முயற்சித்தார். இருந்தாலுமே ஒரு அழகான காதல் கதையாக இருந்தது. படத்தின் முதல் பாதி சுவாரசியமாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அடுத்து என்ன? என்று யூகிக்க கூடிய அளவிற்கு எளிமையாக இருக்கிறது.
ஹீரோ- ஹீரோயின் இடையே உருவாகும் காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். பல இடங்களில் கௌதம் மேனன் படம் பார்ப்பது போலவே கதை செல்கிறது. இருந்தாலுமே கதாபாத்திரங்கள் உடைய வடிவமைப்பை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். ஹர்ஷத் கானுடைய நடிப்பு பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறது. ஹர்ஷத் கான் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
பல இடங்களில் கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது ஹர்ஷத் உடைய நகைச்சுவை தான். இவரை அடுத்து படத்தின் திருப்புமுனையாக வருவது விடிவி கணேசனுடைய கதாபாத்திரம் தான். கொஞ்சம் கூட இவருடைய நடிப்பில் சுவாரசியம் குறையவே இல்லை. கதாபாத்திரங்கள் அனைத்தையுமே சிறப்பாக இயக்குனர் வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். காதல் படம் என்றாலே பாடல்களும் இசையும் தான் பட்டையை கிளப்பும்., ஆனால் இந்த படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பாடல்கள், பின்னணி இசை எதுவும் இல்லை.

மேலும், படத்தினுடைய இன்னொரு பிளஸ் சிலம்பரசன் உடைய வாய்ஸ் ஓவர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவருடைய குரல் கதையோடு பயணித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினுடைய காதல் வசனமும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது
தொழில் நுட்ப விஷயங்களிலும் படத்தில் எந்த குறையுமே இல்லை. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடிப்பு அருமை
நகைச்சுவை காட்சிகள் நன்றாக இருக்கிறது
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சூப்பர்
எஸ்டிஆர் வாய்ஸ் ஓவர் நன்றாக இருக்கிறது
எடிட்டிங் அருமை
முதல் பாதி சுவாரசியமாக இருக்கிறது

குறை:
இரண்டாம் பாதியை சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்
காதல் காட்சிகள் பெரிதாக கனெக்டாகவில்லை
பாடல்கள் பின்னணி இசை கவரவில்லை
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் ஆரோமலே படம் - இருதுருவ காதல் கதை






