இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இப்படத்தில் ஏகன், சத்யா தேவி, ஐஸ்வர்யா தத்தா, பிரிகிடா சாகா, மானஸ்வி கொட்டாச்சி, குட்டி புலி தினேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், யோகி பாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டி. அருள் நந்து மற்றும் மேத்யூ அருள் நந்து இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். என். ஆர். ரகுநாதன் இசை அமைத்திருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதைப் பார்ப்போம்.

கதைக்களம்:
தேனி, ஆண்டிப்பட்டியில் இருக்கும் செல்லதுரையின்(ஏகன்) அம்மா தவறான உறவால் செல்லதுரையையும், அவன் தங்கை சுதாவையும் (சத்யா தேவி) சிறுவயதிலேயே விட்டுவிட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேடிச் சென்று விடுகிறார். இதனால் கோபப்படும் செல்லத்துரையின் அப்பா தனது பிள்ளைகளை பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு அவரும் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தனியே சென்று விடுகிறார். தங்களை கவனித்துக் கொண்ட பாட்டியும் கொஞ்ச நாளிலேயே இறந்து போக, கைவிடப்பட்ட செல்லதுரைக்கு அவன் தங்கைக்கும் ஆதரவாக இருக்கிறார் அந்த ஊரில் இருக்கும் பெரியசாமி (யோகி பாபு).
பெரியசாமி, தன்னுடைய கோழிப்பண்ணையிலேயே செல்லதுரைக்கு வேலையும் போட்டுக் கொடுத்து செல்லதுரையையும் அவரின் தங்கை சுதாவையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார். சின்ன வயதில் தனது அம்மா செய்த காரியத்தால், ஊரில் பல அவமானங்களை சந்திக்கிறார் செல்லதுரை. இன்னொரு பக்கம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. அதனால் அம்மாவைப் போலவே தங்கையும் தனக்கு அவமானத்தை தேடி தரப் போகிறாள் என கோபப்படுகிறான் செல்லதுரை. இதன் பிறகு, தங்கை சுதா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? அண்ணன் தங்கையின் காதலை ஏற்றுக் கொள்வாரா? இதை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை

முதற்பாதி முதல் இரண்டாம் பாதியில் பாதி வரை படம் சோர்வாகவே செல்கிறது. எதார்த்தமான கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் கொடுத்து நம்மை கவர்ந்த சீனு ராமசாமியின் டச் இந்தப் படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகன் ஏகன் தன்னால் முடிந்த அளவிலான நடிப்பை கொடுத்திருந்தாலும், அந்த நடிப்பு கதைக்கு போதுமானதாக இல்லை. ஆனால், சில காட்சிகளில் அவரது நடிப்பை பார்க்கும்போது, அவரைப் பாராட்டிய தீர வேண்டும்.
யோகி பாபு நகைச்சுவையை தாண்டி, ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதில் அழகாக நடித்துள்ளார். தங்கையாக நடித்த சத்யா தேவி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். கதாநாயகியாக வரும் பிரிகிடா உடைய நடிப்பு பல இடங்களில் செயற்கையாக உள்ளது. படத்தில் பேசப்பட்டுள்ள சமுதாய பிரச்சனைகளும், அண்ணன் தங்கை இருக்கும் பாசமும் வெறும் வசனங்களில் மட்டுமே இடம்பெற்று இருப்பதால் இந்த கால இளம் பார்வையாளர்களிடம் கிரிஞ்ச் டேகை பெறுகிறது. திரைக்கதை நன்றாக இருந்திருந்தால் படம் வெற்றி பெற்று இருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

நிறை:
யோகி பாபுவின் நடிப்பு
ஆபாச வசனங்கள், வன்முறை இல்லாதது.
இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
குறை:
திரைக்கதையில் கவனம் செலுத்திருக்கலாம்.
படத்தில் விறுவிறுப்பு இல்லை
நிறைய இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங்
சீனு ராமசாமியின் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றம்தான்.
மொத்தத்தில், கோழிப்பண்ணை செல்லதுரை ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.






