திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு சுவரில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது திருட்டு கும்பல். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும், இவர்கள் செய்த செய்த திருட்டு வேலை போலீசுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையடித்த நகை சம்பந்தமாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் மாட்டிக்கொண்டார். ஆனால் ,அவருடன் வந்த சுரேஷ் என்பவர் மட்டும் தப்பி ஓடினார். மேலும், மணிகண்டனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளை தொழிலிலேயே பிரபலமான திருவாரூர் முருகனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சுரேஷ் திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இந்நிலையில் நகை கொள்ளை வழக்கில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசனை போலீசார் கைது செய்தார்கள்.மேலும், அவனிடம் 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தார்கள். இதனைத்தொடர்ந்து இந்த நகை கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டன என்றும் போலீசார் அறிவித்தனர். பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளைக்காரன் முருகன் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருந்தன.
அதுமட்டுமில்லாமல் அவர் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் இருந்து தனக்கு வந்த பங்கில் சிலவற்றை சினிமா துறையில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அதிலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது கர்நாடகாவில் – 72 வழக்குகள், தமிழகத்தில் – 17 வழக்குகள், ஆந்திராவில் – 4 வழக்குகள் என பதிவானவை மட்டும், 93 வழக்குகள். இதில் பல வழக்குகளில் முருகன் தண்டனை பெற்று இருந்தார்.
திருச்சி வழக்குககளில் முருகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் பிற வழக்குகளால் விடுதலை ஆக முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், முருகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவாக இருந்தார். பெங்களூரு சிறையில் இருந்த அவர் உடல்நலக்குறைவு மோசமானதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்டோபர் 27) காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வு முடிந்து உடலை திருவாரூர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுவதாக முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.